கடந்த வருடம் பிரபலமான ஒரு தமிழ் தினசரி செய்திதாளில் வந்த செய்தி ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களுக்குள் ஏராளமான மாணவ மாணவிகள் மதிப்பெண் பெற்றுள்ளார்கள். அவர்களில் பலர் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள். ஆனால் இவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் படிக்கவைக்கபட்டு மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார்கள். ஒருவர் கூட அரசு பள்ளியில் படிக்கவைக்கவில்லை. ஏன்? அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே அரசு பள்ளி மீது நம்பிக்கை இல்லையா? இதற்கு வெட்கப்பட வேண்டாமா?”
இந்த செய்தி வந்தபொழுது நாம் மிகவும் வேதனைபட்டோம்!. கோபப்பட்டோம்! சுயபச்சாதாபம் கொண்டோம்!. இயலாமை குறித்து ஆற்றாமை கொண்டோம்! இந்த வருத்தத்தில் விளைந்த கட்டுரை தான் இது.
முதற்கட்டமாக பல அரசு பள்ளி ஆசிரியர்கள் கூடிய SSA CRC & RMSA பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடம் நாம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தோம்!...
கேள்வி 1 - அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?
கேள்வி 2 - அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
கேள்வி 3 - அரசு பள்ளிகளின் தரத்தை எவ்வாறு உயர்த்தலாம்? இன்றைய கல்வி முறையில் எந்த வகையிலான கல்வி மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
இந்த கேள்விகளுடன் நடந்த கூட்டங்களில் ஆசிரியர்கள் பலரும் தங்கள் கருத்தை ஆர்வமாக பதிவுசெய்தனர். ஆண் ஆசிரியர்களை காட்டிலும் பெண் ஆசிரியர்கள் பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூட வெளிப்படையாகவும், தெளிவாகவும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இக்கருத்துகளின் தொகுப்பே நமது இக்கட்டுரை.
கேள்வி 1 - அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?
- அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் மனமும், கைகளும் கட்டப்பட்டிருக்கிறது. அடியாத மாடு படியாது என்பார்கள்! ஆனால் அரசு பள்ளியில் மாணவர்களை அடித்து திருத்த இயலாது. இதனால் படிக்காமல் ஏமாற்றும் தீய ஒழுக்கங்களையும் கொண்ட மாணவர்களை கண்டு தங்கள் பிள்ளைகளும் கெட்டுவிடுவார்கள்! பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும், அதேசமயம் நாரோடு சேர்ந்த பூவும் கொஞ்சமாவது நாரத்தான் செய்யும். எனவே எங்கள் பிள்ளைகளை அடித்தும், கண்டித்தும் வளர்க்கக்கூடிய தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளோம்!
- அரசு பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கிடையாது. ஆனால் பல தனியார் பள்ளிகளிலும் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்படுகிறது. இதனால் அண்டை மாநிலத்திற்கு செல்லும்போதும், பல உயர்மட்ட தேர்வுகள் எழுதும்போதும் மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது.
- முந்தைய காலத்தில் பொதுமக்கள் பலரும் இரண்டுக்கும் மேற்பட்ட பல குழந்தைகளை பெற்றிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவளிக்கவே இயலாத நிலையில் அவர்களை அரசு பள்ளிகளில் படிக்க வைத்தனர். ஆனால் இப்போதோ ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெரும்பாலோர் பெற்றுகொள்கின்றனர். ஆதலால் தனது பிள்ளைகளுக்கு உரிய வசதி வாய்ப்புகள் அனைத்தும் ஏற்படுத்தி தர வேண்டும் என நினைக்கின்றனர். இந்நிலையில் தன் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான கட்டிடம், மின்விசிறி அல்லது ஏசி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவற்றை வேண்டும் என பொதுமக்கள் நினைத்து இவை பெரும்பாலும் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் சேர்க்கும் போது அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நாங்களும், ஒரு பெற்றோராக தங்கள் பிள்ளைகளுக்கு மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என நினைப்பது தவறா?
கேள்வி 2 - அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
- அரசு பள்ளிகளில் இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்பட வேண்டும்.
- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற இதர பணிச்சுமைகளை குறைத்து முழுமையாக கற்பித்தலில் ஈடுபட செய்ய வேண்டும்.
- சுகாதாரமான கழிவறை, தூய்மையான குடிநீர், பாதுகாப்பு குறைபாடு இல்லாத கட்டிடங்கள், மின்விசிறி, கணிணி கல்வி போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.