
பிறப்புச் சான்றிதழ் என்றால் என்ன?
பெயர், பாலினம், பெற்றோர் பெயர், பிறந்த இடம் போன்ற பல தகவல்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ ஆவணமே பிறப்புச் சான்றிதழாகும்.
பிறப்புச் சான்றிதழ் எதற்கு?
நாட்டின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும், பள்ளி சேர்க்கை, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற இன்ன பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் அவசியமாகிறது.
பிறப்புச் சான்றிதழுக்கு யார் பொறுப்பு?
பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கு பிறப்பு மற்றும் இறப்புக்கான முதன்மை பதிவாளரே பொறுப்பு. உள்ளூர் பதிவாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் உதவியுடன் பிறப்புச் சான்றிதழ் பதிவுகளை ஒருங்கிணைத்து, ஆவணங்களை மேற்பார்வையிட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நம் நாட்டில் நேரடியாக பதிவாளர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது இணையம் வாயிலாக (ஆன்லைனிலும்) விண்ணப்பிக்கலாம்.
பதிவாளர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கும் முறை
உள்ளூர் பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்
குழந்தை பிறந்ததும் மருத்துவ அதிகாரி பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தைக் கொடுப்பார். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் குழந்தையின் பெயர், ஆதார் அட்டையில் உள்ளபடி பெற்றோரின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், குழந்தை பிறந்ததற்காக மருத்துவர்கள் கொடுத்த மருத்துவ அறிக்கை, பெற்றோரின் ஆதார் நகலை இணைக்க வேண்டும். (முகவரியை உறுதி செய்யும் வகையில் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் ஒரு ஆவணத்தை கூட இணைக்கலாம்.)
பிறப்பு பற்றிய விரிவான தகவல்களை, பிறந்த தேதி மற்றும் இடம் உட்பட, அலுவலகத்தில் உள்ள பதிவாளர் அல்லது அதிகாரிக்கு வழங்க வேண்டும்.
பதிவுக்கான தொகையை செலுத்த வேண்டும். (குறைந்தபட்சம் ரூ. 20 | குழந்தை பிறந்த 21 நாள்களுக்கு பிறகு விண்ணப்பித்தால் அதற்கேற்ப தொகை கணக்கிட்டு வசூலிக்கப்படும்)
அலுவலகத்தில் உள்ள பதிவாளர் அல்லது அதிகாரி சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்ப்பார்.
சரிபார்ப்பு முடிந்ததும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்களின்படி பிறப்புச் சான்றிதழை வழங்குவார்.
இணையம் வாயிலாக விண்ணப்பிப்பது எப்படி?.
பிறப்புச் சான்றிதழுக்கான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://crstn.org/birth_death_tn/BCert பக்கத்தை திறக்கவும்.
அதில், பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான விருப்பம் வழங்கப்படும்; அதைத் தேர்ந்தெடுக்கவும்.
செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதால், சான்றிதழின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
பட்டியலில் இருந்து மாவட்டம் மற்றும் டவுன் பஞ்சாயத்து போன்ற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.
தமிழ்நாடு பிறப்புச் சான்றிதழ் ஆன்லைன் படிவம் தோன்றும். இதில் குழந்தையின் பிறந்த தேதி, பாலினம் மற்றும் சூட்டப்பட்ட பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.
பெற்றோரின் பெயர், ஆதார் எண்கள், இருப்பிட நிரந்தர முகவரி போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
குழந்தை பிறந்த இடம், மருத்துவமனை முகவரியை இட வேண்டும். மருத்துவமனை அல்லாமல் வீடு அல்லது பிற இடங்களில் பிரசவம் நடந்திருந்தால் அந்த முகவரியை இட வேண்டும்.
தாயின் இருப்பிடம், நகரம், கிராமம் மற்றும் மாவட்டம் போன்ற அனைத்துத் தகவல்களையும் நிரப்ப வேண்டும்.
பெற்றோர் இருவரின் கல்வி மற்றும் தொழில், மதம், திருமணத்தின்போது தாயின் வயது, குழந்தை பிறந்தபோது தாயின் வயது, பிரசவ முறை போன்ற சில கூடுதல் தகவல்களை அளிக்கவும்.
சிவப்பு நட்சத்திரக் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளவற்றை கட்டாயம் நிரப்ப வேண்டும்.
அனைத்தையும் நிரப்பிய பிறகு பெற்றோரின் ஆதார் அட்டை போன்ற உரிய ஆவணங்களை இணைத்து பொத்தானை அழுத்தி சமர்ப்பிக்கவும்.
பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்ததற்கான கோரிக்கை எண் உருவாகியிருக்கும். அதனை குறித்துக்கொள்ள வேண்டும்,
விண்ணப்பங்கள் சரிபார்த்து பரிசீலனை செய்த பிறகு பிறப்புச் சான்றிதழ், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். அதனை நகல் எடுத்துக்கொள்ளலாம்.
அரசு முத்திரையோ அல்லது கையொப்பமோ இல்லாமல் தற்காலிகமாக பிறப்புச் சான்றிதழ் கொடுக்கப்படும். எனினும் இதனை அதிகாரப்பூர்வ ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தின் பரிசீலனை நிலையை எவ்வாறு அறிவது
பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணைப் பயன்படுத்தி மீண்டும் உள்நுழைந்து, பெறப்பட்ட தற்காலிக கோரிக்கை எண்ணை உள்ளீடு செய்தால் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்படும். குறுஞ்செய்தி வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளதா?
குழந்தை பிறந்து 21 நாள்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக ரூ. 20 கட்டணம் பெறப்படுகிறது. சூழல் காரணமாக விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு கூடுதல் தொகையுடன், 12 மாதங்கள் வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அவகாசம் உள்ளதா?
பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969-ன் படி, குழந்தையின் பெயரைக் குறிப்பிடாமலும் பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும். அதாவது பிறப்பை பதிவு செய்ய முடியும். ஆனால், பின்னர் எப்போது பெயர் சேர்க்கலாம் என்ற கேள்வி எழும்.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் விதி எண் 10-ன் படி, குழந்தை பிறந்ததில் இருந்து 12 மாதங்களுக்குள்(ஓராண்டு) பெயர் சேர்க்கலாம், 1999-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி இந்த அவகாசம் 15 ஆண்டுகளாக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு இந்த அவகாசம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...