புகார்கள், போராட்டங்களை அடிப்படையாக வைத்து, அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த நீலநாராயணன், தன்னை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு விசாரணையின் போது கல்வி துறை இணை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் எந்த விபரங்களும் இல்லை.
அரசு தரப்பில், நிர்வாகத்தை சுமுகமாக்கும் நோக்கில் மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்விதமான ஆதாரமும் இல்லாத நிலையில், யாரை திருப்திப்படுத்த இந்த பணியிட மாற்ற உத்தரவை பிறப்பித்தார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. உரிய காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறின்றி யாரையேனும் மகிழ்விப்பதற்காக, அது பயன்படுத்தப்பட்டால் ஏற்கத்தக்கதல்ல. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நிச்சயம் தலையிட்டு நீதியை நிலைநாட்டும்.
எந்த ஊழியரையும் நீதியின்றி காயப்படுத்தக் கூடாது. அது அவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் காயப்படுத்தும். இந்த வழக்கில் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு நீதியற்றது. ஊழியர்கள் அல்லது சங்கங்களால் அளிக்கப்படும் புகார் அல்லது அவர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் அடிப்படையில், அலுவலர்களை இடமாற்றம் செய்ய காரணமாக கூறுவதை ஏற்க இயலாது. இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டால், இதை ஏற்றுக்கொண்டால் எந்த அரசு ஊழியரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற முடியாது. எனவே இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர், மனுதாரரை பணியிட மாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...