Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"அரசுப் பள்ளியும், தனியார் பள்ளியும்" - பெண் குழந்தைகள் பூப்பெய்தல் நிகழ்வு

283191 கோவை செங்குட்டைப் பாளையம் மெட்ரிக் பள்ளியில் முதன்முதலில் பருவம் எய்திய எட்டாம் வகுப்பு மாணவியை, வகுப்பறைக்கு வெளியே, பூட்டப்பட்ட இன்னொரு வகுப்பறைப் படிக்கட்டில் அமர வைத்து ஆண்டு இறுதித் தேர்வை எழுத வைத்துள்ளனர். 

மிகவும் பிற்போக்குத்தனமான, சனாதனத்தில் ஊறிப்போன பெண்ணடிமைத்தனமான கொடூர செயல் இது. அந்தப் பள்ளிக்கும் வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியருக்கும் என் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்குழந்தைகள் பருவம் எய்தும் வயது தற்போது குறைந்திருக்கிறது. பொதுவாக, எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பருவம் அடைவார்கள். அதில் பள்ளியில் பருவமடைந்த பெரும்பாலான மாணவிகள் பெண் ஆசிரியர்களிடம் வந்து சொல்வார்கள். 

முதலாவது, ஆசிரியர்கள் அம்மாணவியை அறைக்கு அழைத்து, பயப்பட வேண்டாம், இது இயற்கையான நிகழ்வு, எல்லாப் பெண்களுக்கும் இது நடக்கும், எங்களுக்கும் இது நடக்கிறது , ஒன்றுமில்லை என்று உளவியல் ஆலோசனை அளிப்போம். 

இரண்டாவது, நாப்கின் கொடுத்து அப்போதைய நிலையில்  அவர்களை பாதுகாப்பாக உணரச் செய்வோம்.

மூன்றாவது, பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிப்போம். உடனே அவர்களின் அம்மாக்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவார்கள். அவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள். ஒன்றும் பயப்பட வேண்டாம், நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

பள்ளிக்கு வந்து குழந்தையை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்வோம். அவர்களும் வந்து அழைத்துச் செல்வார்கள். சில சமயம் பெரும்பாலான பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வார்கள். வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது குழந்தையைக் கூட்டிச்செல்ல உறவினரை அனுப்புகிறோம் என்று சொல்வார்கள். 

பெற்றோர்களிடமிருந்து உறவினர் பெயர், அவர் குழந்தைக்கு என்ன உறவு  வேண்டும், அவர் தொலைபேசி எண் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, வரும் உறவினரை விசாரித்து விட்டுத்தான் குழந்தையை அவரோடு அனுப்பி வைப்போம். வீட்டுக்குச் சென்றதும் திரும்பவும் போன் செய்து குழந்தை வீட்டுக்கு வந்து விட்டார் என்பதை உறுதிபடுத்தச் சொல்வோம்.

நான்காவது, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு, வீட்டில் வயதானவர்கள் மட்டும் இருந்தால், பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நாங்களே  டூவீலரில் மாணவியை அமரவைத்துக் கொண்டு போய் வீட்டில் பாதுகாப்பாக, விட்டுவிட்டு வருவோம். 

ஐந்தாவது , பள்ளிக்குப் பெற்றோர் வந்து பருவமெய்திய மாணவியை அழைத்துச் செல்லும்வரை அம்மாணவியைத் தனிமைப் படுத்த மாட்டோம். நாப்கின் கொடுத்து கழிவறைக்கு அனுப்பிவிட்டு, பின்பு வகுப்பறையிலேயே அமர வைத்து விடுவோம். அந்த நேரத்தில் எல்லோருடனும் அமர்ந்து இருப்பதையே அவர் பாதுகாப்பாக உணர்வார். தவிர பய உணர்வும் இருக்காது.

ஆறாவது,  பெற்றோர்க்கு, தகவல் தெரிவிக்கும்போது  குழந்தை பருவமெய்திய நேரத்தைக் கேட்பார்கள். அதையும் ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து விடுவோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் காவேரிப்பாக்கம் பள்ளியில் பணிபுரிந்தபோது ஒரு மாணவி பள்ளியில் பருவமெய்தி விட்டார். பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தபோது கட்டட வேலைக்காக சென்னை சென்றுவிட்டதாகவும், வீட்டில் வயதான தாத்தா, பாட்டி இருப்பதாகவும், பள்ளிக்கு வந்து மாணவியை அழைத்துச் செல்ல யாருமில்லை, நீங்களே வீட்டில் கொண்டுவந்து  விட்டுவிட முடியுமா என்று கேட்டார்கள்.

நானும் இன்னொரு ஆசிரியரும்  தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, இரண்டு டூ வீலர்களில்  ஈராளச்சேரி என்னும் அந்தக் கிராமத்திற்குச் சென்று குழந்தையை விட்டுவிட்டு வந்தோம். அந்தத் தெரு மக்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு , டீ குடிங்க, காபி குடிங்க என்று உபசரித்தார்கள். ஒரே அன்பு மழையாக இருக்கும்.

 பெரும்பாலும்  பெற்றோர்கள், ஏழ்மையான எளிய மக்கள். அந்தக் குழந்தை கையில் ட்ரெஸ் எடுத்துக்கோ என்று சொல்லி சிறுதொகையைக் கொடுப்போம். அந்தக் குழந்தை மறுக்கும். உறவினர்கள், டீச்சருங்க ஆசையா கொடுக்கறாங்க, வாங்கிக்கோ வாங்கிக்கோ என்பார்கள். நிம்மதியோடு நாங்கள் பள்ளி திரும்புவோம்.

மறுநாளோ, மூன்றாவது நாளோ அக்குழந்தையின் பெற்றோர்கள், வேறொரு மாணவியிடம் டிபன் பாக்ஸ் நிறைய எங்களுக்கு புட்டு கொடுத்தனுப்புவார்கள். அதை ஆசிரியர்கள் எல்லாரும் ஒரு வாய் சாப்பிடுவோம். 

இன்னொரு குழந்தையை அப்படி விட்டுவிட்டுச் சென்றுவர ஓர் கிராமத்திற்குச் சென்றிருந்தபோது கத்தரிக்காய்த் தோட்டத்திற்குக் கூலி வேலைக்குச் சென்றிருந்த மாணவியின் தாய், தூக்கிச் செருகிய புடவையுடன் ஓடிவந்து  அரைகிலோ அளவிலான முள் கத்தரிக்காயை அன்பாக கையளித்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. அன்று இரவு ஒரு பிடிசோறு அதிகமாய் உள்ளிறங்கியது.இதுதான் அரசுப்பள்ளி, இந்த மாதிரி உணர்வுகளை அனுபவித்தால் மட்டுமே புரியும். அரசுப் பள்ளிகள், அரசு ஆசிரியர்கள்மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குமான பிணைப்பு என்பது அரசுப்பள்ளிகள் தவிர தனியார் பள்ளிகளில் இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.

தனியார் பள்ளிகளில் இம்மாதிரியான நிகழ்வின்போது நிர்வாகத்திற்குச் சொல்லிவிடுவார்கள். அவர்கள் பெற்றோருக்குத் தகவல் சொல்லி, பெற்றோரும் வந்து அழைத்துச் சென்று விடுவார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் பொறுப்பெடுத்துக் கொள்வோம். அது ஒரு நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான இடம்.

தொடர்புடைய, கோவை செங்குட்டைப்பாளையம் சுவாமி சித்பவானந்தா தனியார் பள்ளியில் குழந்தையைத் தனிமைப் படுத்தியதும், வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்ததும் மிகப்பெரிய தவறு. பள்ளிக் கல்வித் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 'வழிகாட்டும் நெறிமுறைகள்' வகுத்து அதைப் பின்பற்றுகிறார்களா என அரசு கண்காணிக்க வேண்டும்.

- Sukirtha Rani





Related Posts:

1 Comments:

  1. அருமையான பதிவு...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!