தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு 2017ம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு விரிவான ஆன்லைன் கல்வி தளமே, ஸ்வயம்.
முக்கியத்துவம்
எவர் ஒருவரும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதோடு, திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்தளம், பொறியியல், அறிவியல், மேலாண்மை, மொழி, கணிதம், மானுடவியல், கலை மற்றும் பொழுதுபோக்கு, வர்த்தகம், பொது, நூலகம், கல்வி ஆகிய பிரிவுகளில் பாடங்களை வழங்குகிறது.
இக்னோ, இந்திய மேலாண்மை நிறுவனம்- பெங்களூரு, என்.சி.இ.ஆர்.டி., உள்ளிட்ட பல நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களால் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுகின்றன.
வீடியோ வாயிலாக விரிவுரை, பதிவிறக்கம் செய்யக்கூடிய பாடங்கள், சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையிலான தேர்வு முறை, ஆன்லைன் கலந்துரையாடல் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்தல் என ஸ்வயம், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடியோ- வீடியோ மற்றும் மல்டி மீடியா போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் முறை எளிதாக்கப்படுகிறது. தமிழ், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கற்பிக்கப்படுவதோடு, இதர மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றன.
தேசிய ஒருங்கிணைப்பாளர்கள்
சிறந்த தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், 10 சிறந்த அமைப்புகள் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுகின்றன. அவை, சர்வதேச படிப்புகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., பொறியியல் படிப்புகளுக்கு என்.பி.டி.இ.எல்., தொழில்நுட்பம் அல்லாத முதுநிலை கல்விக்கு யு.ஜி.சி., இளநிலை கல்விக்கு சி.இ.சி., பள்ளிக் கல்விக்கு என்.சி.இ.ஆர்.டி., மற்றும் என்.ஐ.ஓ.எஸ்., பிற மாணவர்களுக்கு இக்னோ, மேலாண்மை படிப்புகளுக்கு இந்திய மேலாண்மை நிறுவனம் - பெங்களூரு, ஆசிரியர் பயிற்சி திட்டத்திற்கு என்.ஐ.டி.டி.டி.ஆர்., மற்றும் தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளுக்கு ஐ.என்.ஐ., என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பாடங்கள் இலவசம்
இத்திட்டத்தில் பாடங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் மட்டும் சிறிய கட்டணத்துடன், தேர்வு மையங்களில் நேரடியாக நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளலாம். பாடங்களில் சேர்ந்து படிக்க கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு ஏதும் இல்லை. எனினும், சில படிப்புகளில் அடிப்படை அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.
விபரங்களுக்கு: https://swayam.gov.in/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...