அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் எல்லார்க்கும் எல்லாம் என்கிற முழக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த பல்லாண்டு கால கோரிக்கைகள் குறித்த தவிர்ப்பு என்பது வேதனைக்குரியது. இதன் காரணமாக 'தமது அரசு' என்று முழுதாக நம்பிக் கொண்டிருந்த ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் முற்றாக நம்பிக்கை இழந்து புலம்புவதையும் சுடுசொற்களை அள்ளி வீசுவதையும் பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
பொதுமக்கள் கண்ணோட்டத்தில் இந்திய அளவில் பேசுபொருளான, பாராட்டத்தக்க, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி கைவிரித்தாலும் தம் சொந்த நிதியைத் தந்து புலம்பாத துணிச்சலான முடிவுகளை இவர்கள் மனம் திறந்து பாராட்டி வரவேற்க தவறியது என்பது வருந்தத்தக்க ஒன்றாகும். உண்மையில் தமிழ்நாடு அரசு நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. எத்தனை எத்தனைக் குரூரப் புத்தியுடன் ஒன்றிய அரசு உள்ளது என்பது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியைத் தர தொடர்ந்து மறுத்து வருவதிலிருந்து அறிய முடியும்.
இதுபோன்று வேறு எந்த மாநிலத்திலும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. மும்மொழிக் கல்விக் கொள்கையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தும் போக்கு என்பது ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை குழந்தைகளின் அடிப்படை பிறப்புரிமையாக விளங்கும் கல்வியின் அடிமடியில் கை வைப்பதற்கு ஒப்பாகும். தற்போது வளர்ந்து வரும் உலக சூழலில் மூன்றாவது மொழியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கற்றுத் தெளிந்து தேர்ச்சிப் பெற்று உலகளவில் கோலோச்ச வேண்டிய காலகட்டத்தில் எந்தவகையிலும் உதவாத, கண்ணியம் மிக்க வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்காத, மனித புழக்கத்தில் இல்லாத, வழக்கொழிந்த, அந்நிய, இந்தி வழியிலான சமஸ்கிருத மொழித் திணிப்பைத் திணிக்க முயல்வது என்பது கேடு விளைவிக்கும் செயலாகும்.
இது கல்வியில் முன்னோக்கிப் பீடு நடை போடும் தமிழ்நாட்டை கல்வியில் மிகவும் பின்தங்கிய உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் முதலான மாநிலங்களுக்குக் கீழாக முடமாக்கிப் பின்னோக்கி இழுக்க, நியாயமாக வழங்க வேண்டிய கல்வி நிதியை அபகரித்து வைத்துக்கொண்டு 'பெரியண்ணன்' திமிருடன் நடந்து கொள்வதை எளிதில் புறம் தள்ளி விடமுடியாது. நாசகார கும்பல் விரிக்கும் வலையில் அப்பாவி ஆசிரியர் பெருமக்களும் அரசு ஊழியர்களும் மெல்ல வீழ நினைப்பது என்பது அபாயகரமானது. ஆபத்தானதும் கூட. நாக்பூர் கல்விக் கொள்கையை மடைமாற்றிப் புதிய கல்விக் கொள்கை என ஏழு கோடி தமிழர்களின் காதில் பூச்சூடும் நாசகார கும்பலின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பல்வேறு அரசியல் காரணங்களாலும் அழுத்தங்களாலும் சொந்த தாய்மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து புதிய தாய்மொழியாகிப் போன இந்தியை மட்டும் ஒற்றை மொழியாகக் கற்கும் மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகள் இருமொழிக் கொள்கை வழி உலகாளும் தமிழ்நாட்டில் மும்மொழி அடிப்படையிலான கல்வியைக் கட்டாயம் கடைப்பிடிக்க முன்மொழியும் அடாவடி நிகழ்வு என்பது வேடிக்கையான ஒன்று.
இன்றைய எண்ம தொழில்நுட்ப காலகட்டத்தில் மொழி என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஏராளமான தனித்துவமான மொழிசார் செயலிகள் கொட்டிக் கிடக்கின்றன. உலகளவில் நிகழும் நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், புதுமைகள், விவாதங்கள் போன்றவற்றை உடனுக்குடன் அறியவும் எதிர்வினையாற்றவும் கற்கவும் கற்பிக்கவும் பயன்படுத்தவும் உலகம் முழுவதும் இரண்டாம் தாய்மொழியாக விளங்கும் ஆங்கிலம் போதுமானது என்று பலரும் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்களிடையே அந்நிய மொழியான ஆங்கிலம் சரளமாக சராசரியாக நாளொன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் புழங்கப்படுவதை அறிய முடிகிறது. அதேபோல், 0 - 3 வயது குழந்தைகளிடம் 300 முதல் 500 வரையிலான ஆங்கில சொற்கள் பொதிந்து கிடப்பதாகச் சொல்லப்படுகிறது. நன்கு படித்த மேட்டிமை வர்க்கத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்களில் இந்திப் புழக்கம் என்பது அறவே இல்லை என்பது தான் உண்மை. தற்போது நீட் மற்றும் ஜேஇஇ வகுப்புகளில் வெற்றி பெறவும் ஆங்கில மோகம் தணிந்து புதிய மும்மொழி மோகம் கொண்டு மற்றவர்களிடையே தனித்துவம் மிக்கவர்கள் நாங்கள் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மனோபாவம் கொண்டவர்கள் இந்தி மொழியறிவு குறித்து வினவப்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்க நிர்க்கதியற்றுத் தவிக்கும் நிலை பரிதாபகரமானது. இதனை நடுத்தர மற்றும் அடித்தட்டு பெற்றோர்களிடையே பொருத்திப் பார்க்க வேண்டியது ஈண்டு இன்றியமையாதது.
குழந்தைகளின் கல்வி நலனில் ஆண்களைக் காட்டிலும் தாய்மார்களின் பங்கு அளப்பரியது. அதனால் தான் ஒவ்வொரு பெற்றோரும் இரண்டாம் ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர். உலகத் தொடர்பு மொழியாகத் திகழும் அந்நிய வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கில மொழியைக் குடும்ப சூழலில் கற்பிக்கத் தடுமாறும் பெற்றோருக்கு முற்றிலும் வேறுபட்ட தமிழ்ச் சூழலில் புழக்கத்தில் இல்லாத மற்றுமொரு கூடுதலான கட்டாய இந்தி மொழி என்பது எத்தனை துயரமானதும் துக்ககரமானதும் ஆகும் என்பதை உணர முற்படுதல் வேண்டும்.
ஒரு குக்கிராமத்தில் வாழும் மக்கள், தாய்மொழித் தமிழ் தவிர்த்து ஆங்கிலம் படித்தவர்கள் பலரும் பல்வேறு உயர்ந்த, உன்னத பதவிகளில் உயரிய இடத்தில் இருப்பதையும் வசதியான வாழ்க்கை வாழ்வதையும் கண்கூடாகக் காண்கின்றனர். அதேவேளையில், இந்தி மொழி தெரிந்தவர்கள் ஏதேனும் ஒரு பழைய வாகனத்தில் கம்பளிப் போர்வை, சோன்பப்பொடி, பானிபூரி உள்ளிட்டவற்றை விற்கும் சக கூலி ஆட்களாக வயிற்றுப் பிழைப்பிற்காக அலைந்து திரிவதையும் கண்டு வேதனை அடைகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இந்திய அளவில் உள்ளூர் தொடர்பு மொழியான இந்தி மீது எவ்வாறு நம்பிக்கை பிறக்கும்? ஒரே நேரத்தில் தாய்மொழிக்குச் சற்றும் தொடர்பில்லாத ஈர் அந்நிய மொழிகளைச் சொல்லிக் கொடுப்பதில் தாய்மார்களுக்குத் தான் எத்தனைச் சிரமம்?
இந்திய அளவில் இடைநிற்றல் அதிகம் இல்லாத மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி மற்றும் சுயமரியாதையை அடகு வைத்து மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்கும் பட்சத்தில் ஏழை எளியோரின் உட்சபட்ச நம்பிக்கையாக இருக்கும் கல்வியில் மண் மட்டுமல்ல பாறாங்கல்லே இடிந்து விழும்! மாணவர்கள் நம்பிக்கையோடு வாழ்க்கையும் நொடிந்து வீழும்! புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கவும் தேர்வுக்கு தயார் படுத்தவும் தேர்ச்சி பெற வைக்கவும் உரிய, போதிய ஆட்களின்றி, ஆசிரியரின்றி அல்லல்படும் சூழல் அனைத்து மட்டங்களிலும் நிகழும். தற்போதைய நிலையில், தக்க தகுதிகளுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் அதாவது 99.99 % நபர்களால் தாம் பயிற்றுவிக்கும் பாடம் வேறு என்றாலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பித்தல் மேற்கொண்டு மாணவர்களிடையே குறைந்த பட்ச கற்றல் அடைவை ஏற்படுத்திட முடியும். அதேவேளையில், மூன்றாம் மொழிப்பாடத்தைப் போதிக்கும் அளவிற்கு இங்கு 1% கூட ஆட்கள் இல்லை.
எல்லா துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான நபர்களை தனியார் நிறுவனங்கள் மூலம் ஆளெடுப்பு முறை மூலம் தினக்கூலியாக நியமிக்கும் நடைமுறைகள் மலிந்து விட்ட இச்சூழலில் இந்தி புலமை மிக்க தகுதி வாய்ந்த முறையான ஊதியத்தில் நியமனம் செய்ய மாநில நிதிநிலை அனுமதிக்குமா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழரல்லாத புதிய குடியேற்றங்களும் அவர்களின் ஆதிக்கங்களும் அதனூடாக விளையும் குழப்பங்களும் வாழ்வாதார போராட்டங்களும் இனம் சார்ந்த பகைமை உணர்ச்சிகளும் ஆசிரியர்களிடையே புறத்தில் காணப்படும் விளைவுகள் ஆகும். மாணவர்களிடையே மொழிச் சுமை அதிகமாகி படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும்.
மூன்றாம் மொழியில் கட்டாயத் தேர்ச்சி பெறவேண்டி தம் அனைத்துக் கவனத்தையும் ஒருமுகமாகக் குவிப்பதால் ஏற்படும் திடீர் செயற்கை அரசியல் ஆக்க மன அழுத்தமானது பகுத்தறிவு, அறிவியல் மனப்பாங்கு, பரந்த மனப்பான்மை, சமூக நல்லிணக்கம், தனிமனித ஒழுக்கம், மொழிப்பற்று, தோழமையுணர்வு முதலான நற்பண்புகள் இயல்பாக உருவாவதைத் தகர்த்து தனித்துவ அடையாளமற்ற கல்வியையும் பள்ளியையும் கண்டு அஞ்சும் மழைக்குக் கூட ஒதுங்காத படிக்காதவர்களின் எண்ணிக்கை மிகுதிப்படுத்தும் என்பதில் வியப்பில்லை.
இதன் காரணமாக, தமிழ்ச் சமூகத்திடையே மீளவும் குலத்தொழில் என்பது அதிகரிக்கும். திராவிட எழுச்சியும் தொடர்ந்து பயணித்த ஆட்சியும் அதிகாரமும் எல்லார்க்கும் எல்லாமும் என்று தமிழர் இருண்ட வாழ்வில் புது வெளிச்சம் பாய்ச்சியதால் உண்டான பாமரனுக்குள்ளும் சுடர்ந்த கல்வி விழிப்புணர்வு ஒளி அணைய தொடங்கும். ஒரே சமயத்தில் மூன்று மொழிகளுடன் போராடி வெல்ல முடியாத குழந்தைகள் தன்னம்பிக்கையும் தைரியமும் அற்று ஒன்று இழிவான தம் குலத்தொழில் அல்லது ஏதேனும் தெரிந்த குறைந்த வருமானம் உள்ள தொழில் மேற்கொள்ளவே அதிகம் தலைப்படுவர். இதனால் ஏழ்மையும் வறுமையும் தமிழ்க் குடும்பங்களில் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கல்வி விழிப்புணர்வின்றிப் பல்வேறு சமூகக் குற்றங்களில் சிறார் வயதினர் ஈடுபடும் நோக்கும் போக்கும் மிகும். இது தமிழ்ச் சமூகத்தின் அமைதியை நிர்மூலம் ஆக்கக் கூடும்.
இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் ஆசிரியர் குடும்பங்களையும் அவர்களது வாழ்வாதார வளங்களையும் பாதிக்க வல்லது. மூன்றாம் மொழி கற்றுக் கொடுத்தால் குடியா மூழ்கி விடும் என்று ஆசிரியர் சமூகம் அங்கலாய்ப்பது வேடிக்கையானது. ஆம். பள்ளிப் பிள்ளைகள் குடி மட்டுமல்ல அவர்களை நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் குடியும் சேர்ந்தே கெடும். குறிப்பாக பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கியோர் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குழந்தைகளின் புகலிடமாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றை நம்பியே ஆசிரியர் பெருமக்கள் வாழ்வாரம் மற்றும் வாழ்க்கை வசதிகள் உள்ளன.
மும்மொழிச் சுமையால் ஏற்படும் இடைநிற்றலால் அதிகரிக்கும் ஆளற்ற பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களுக்கென்ன வேலை இருக்கப் போகிறது? எதிர்கால வாழ்க்கை வசதிகள் கிடக்கட்டும். நிகழ்கால வாழ்வு நரகம் ஆகப்போவதை உணருதல் முதலில் நல்லது. எந்தத் தகுதியும் திறமையும் அனுபவமும் இல்லாத பாடம் எடுக்க ஆள் கிடைத்தால் போதுமென்று நினைத்த ஒற்றை மொழிக் கொள்கையை மட்டுமே தீவிரமாகக் கடைப்பிடிக்கும் மாநிலங்களை ஒழுங்குப்படுத்த கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வானது பன்னெடுங்காலமாகத் தகுதியோடும் தனித்துவத்தோடும் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டுக் கல்விச் சூழலில் எத்தகைய பேரிடரைத் தொடர்ந்து விளைவித்து வருவது உணரத்தக்கது.
அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் கும்பல்களின் பொய்யான வாக்குறுதியின் மாய நிழலில் ஆசிரியர்கள் நிலைதடுமாறி வேறுவழியின்றித் தஞ்சம் புகாதவாறு தற்போதைய நவீன திராவிட மாடல் ஆட்சியானது தடுத்து நிறுத்திக் காக்க வேண்டியது அவசர அவசியம் ஆகும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நல்வாழ்வைப் புறந்தள்ளி விட்டு எல்லார்க்கும் எல்லாம் என்கிற முழக்கம் முழுமை பெறாது. அவர்களது கோரிக்கைகளில் எதுவும் புதியது அல்ல. அனைத்தும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாமல் கிடப்பில் போடப்பட்டவையே ஆகும். அவற்றுள் மிகவும் முக்கியமானவை இரண்டு. ஒன்று பழைய ஓய்வூதியத் திட்டம். மற்றொன்று ஊதிய முரண்பாடு களைதல்.
இவையிரண்டையும் தேர்தல் கால வாக்குறுதிகளாக நம்பிக்கை தந்ததன் விளைவாக அந்த விடியலை தமதாக்கிக் கொண்டு உழைத்த நல்லோரின் கனவை நனவாக்குதல் வேண்டாமா? இப்போது இல்லை என்றால் பின் எப்போது? நீங்கள் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்யக்கூடும்? என்பதுதான் அத்தகையோரின் முதன்மையான கேள்விகளாக முன் நிற்கின்றன. ஒரு தாய் ஊட்டச்சத்து மிக்க பால் வழங்குவதில் சுணக்கமும் கணக்கும் காட்டலாம். தாய்ப்பால் கொடுப்பதற்கு கணக்குப் பார்ப்பது வேதனைக்குரியது. இழுத்தடிப்பு மற்றும் ஏமாற்று வேலைகள் இனி எதற்கும் உதவாது. சிறு துரும்புகள் தாம் இவர்கள் என்று புறக்கணிப்பதும் நல்ல எண்ணிக்கை அடிப்படையிலான சாமர்த்திய தேர்தல் வியூகமும் ஆகாது. திடீர் ஏற்ற இறக்க வாக்குகளால் எத்தனையோ எண்ணற்ற பலம் பொருந்திய யானைகள் அடி சறுக்கி வீழுந்த வரலாறும் இங்குண்டு. குடியாட்சி அரசியலில் ஒவ்வொரு வாக்கும் ஒவ்வோர் வாக்கும் மிகவும் முக்கியம்.
தமிழும் ஹிட்! தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையும் ஹிட்! அடிக்க வைத்தவர்கள் எதிர்வரும் 2026 இல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை மெகா ஹிட்டாக்க அடிமட்டத்தில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கிடக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் உண்மையான 'அப்பா' உணர்வுடன் அரவணைக்க வேண்டும் என்பது இந்த ஆட்சி நீடித்து நிலைத்து தமிழ் தமிழர் தமிழ்நாடு நலன்களைத் தொடர்ந்து காக்க வேண்டும் என்று விரும்புவோர் பலரின் நல்லெண்ணம் ஆகும். மேலும், தமிழ் மண்ணை வீழ்த்திவிட்டால் பன்மைத்துவம் நிறைந்த இந்தியத்தைத் தகர்த்து முற்றிலும் மாறுபட்ட இந்துத்துவ மண்ணாக ஆக்கி விடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பொய்களையும் புரட்டுகளையும் வரலாற்றுப் புளுகுகளையும் சனாதன திரிபுகளையும் தாய்மொழி அழித்தொழிப்புகளையும் செத்தொழிந்த இந்தித் திணிப்பு மூலம் சமஸ்கிருத மயமாக்க நடவடிக்கைகளையும் வெறுப்பு அரசியல் துணைக்கொண்டு நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிர்மூலமாக்கும் செயலை தம் சொந்த நலன்களை மட்டுமே முன்னிருத்தி விட்டில் பூச்சிகளாக பேராசை கொண்டு வீழ்ந்து கருக ஆசிரியர் பேரினமும் நினைக்கக்கூடாது.
எழுத்தாளர் மணி கணேசன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...