/tamil-ie/media/media_files/uploads/2022/06/Teachers.jpg)
சமீபக் காலமாகத் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களிடையே அரங்கேறி வரும் ஒழுங்கீனங்கள் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளன. மாணவர்கள் செய்யும் சீர்கேடுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்துவதற்கான அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், நாளுக்கு நாள் பள்ளி மாணவர்கள் மத்தியில் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சீர்கேடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் செய்யும் சின்னஞ் சிறு குறும்புகள், ஒழுங்கீனங்கள், சீர்கேடுகள் ஆகியவற்றை கண்டித்தும், தண்டித்தும், அறிவுரைக் கூறியும் திருத்தி, சமுதாயத்தில் அவர்களை மாண்புமிகு மனிதர்களாக மாற்றுவது ஆசிரியர்களின் தலையாயக் கடமையாக இருந்தது. தவறிழைக்கும் பிள்ளைகளை, அதிலிருந்து திருத்தி நல்வழிப் படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கு அடுத்தப்படியாக ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் ஆசிரியர்களை மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ அல்லது அறிவுரைக் கூறுவதற்கான உரிமையோ கூட ஆசிரியர்களுக்கில்லை. அரசின் சட்டங்களால் ஆசிரியர்களின் வாய்களுக்குப் பூட்டும், கைகளுக்குக் கட்டும் போடப்பட்டிருக்கின்றன.
அதனால், தவறு செய்யும் மாணவர்களைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களின் உயிருக்கே உத்தரவாதமில்லை. அவர்கள் வகுப்பறையிலும் பொதுவெளிகளிலும் மாணவர்களின் தாக்குதலுக்கும், கொலைவெறிக்கும் ஆளாகின்றனர். அதையும் தாண்டி மாணவர்களின் ஒழுங்கீனங்களைத் திருத்துவதற்கு முயற்சிக்கும் ஆசிரியர்கள், அரசின் சட்டத்திற்குள் அகப்பட்டு, எவ்வித விசாரணையுமின்றி ஜெயிலுக்குள் அடைக்கப்படுகின்றனர்.
இது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மரியாதைக் கொடுத்து, அவர்களை அனுசரித்து நடந்த காலம் மாறி, இன்று ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்துப் பயங்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலை தமிழகத்தில், கல்வித்துறையில் கற்றல், கற்பித்தலில் பெரும் இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் பள்ளிக்கூடங்களில் தவறிழைக்கும் மாணவர்களைத் திருத்துவதற்கான சிறு தண்டனை கூட ஆசிரியர்களால் வழங்க வழியின்மையாகும்.
முன்பெல்லாம் மாணவர்கள், பள்ளியில் தவறிழைத்து ஆசிரியர்கள் அதற்குக் கடும் தண்டனை அளித்தால் கூட மாணவர்களின் பெற்றோர், தன் பிள்ளை தவறிலிருந்து திருந்தி வரவேண்டும் என்பதற்காகத் தண்டனை வழங்கிய ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். ஆனால் இப்பொழுது, மாணவர்கள் தடம் மாறும் போது ஆசிரியர்கள் தண்டனை வழங்கினால், அந்த மாணவர் சார்ந்திருக்கும் ஜாதி, மத, அரசியல் கட்சியினர் அனைவரும் ஒண்றிணைந்து, அவர்களின் சுய லாபத்திற்காக அப்பாவிப் பெற்றோரைத் தூண்டிவிட்டு ஆசிரியருக்கும், கல்வி நிறுவனத்திற்கும் எதிராகப் போராட்டக் களத்தில் இறங்கி விடுகின்றனர். அதோடு சமூக வலைதளங்களும் அவர்கள் பங்கிற்கு அவற்றைப் பூதாகரமாக்கின்றன.
இதனால் அவ்வாசிரியர் மட்டுமின்றி பள்ளி நிர்வாகிகள் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன், அப்பள்ளியில் படிக்கும் மாணவியை தாக்கியுள்ளார். இதனை கண்டித்த அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி தலைமையாசிரியை பணியிட மாற்றமும் செய்துள்ளது கல்வித்துறை.
வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே நடக்கும் சிறுசிறு பிரச்னைகள், அவர்களுக்குள்ளே கொலை செய்யும் அளவிற்கு மாறுகிறது. அதுதான் சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாணவனை, அப்பள்ளி சகமாணவர்களே பள்ளியின் வெளியில் வைத்துக் கொலை செய்த சம்பவம். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கும் கொலைகளில், கொலையாளிகளின் பட்டியலில் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் கூறுகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் பல்வேறு விதங்களில் அதிகரித்து வருவதால், தொடக்க நிலையில் படிக்கும் மாணவர்களே அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சிறுவகுப்பிலிருந்தே மாணவர்கள் கீழ்படிதலற்றவர்களாக மாறுகின்றனர். அவர்களை சீர்படுத்துவதற்கே பெரும் சிரமமாக உள்ளது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ‘பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றால் ஆசிரியர்கள் கையில் கம்பு வைத்திருக்க வேண்டும்’ என கேரள மாநில ஐகோர்ட் நீதிபதி குஞ்சுகிருஷ்ணன், கேரள மாநில ஆசிரியர்களுக்கும் கல்வித்துறைக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனை, ஆசிரியர் கம்பால் அடித்தார் எனப் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவ்வாசிரியர் மீது போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். அதனால் ஆசிரியர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுவளித்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன், ஆசிரியருக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு, ‘மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பை உபயோகிக்காமல் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றமும் ஒழுக்கமும் வந்துவிடும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக அவர்களுக்குச் சிறிய தண்டனைக் கொடுத்தாலே கிரிமினல் வழக்கு வந்துவிடும் என்ற அச்சத்துடன் ஆசிரியர்கள் வேலை செய்யக் கூடிய நிலை இருக்கக் கூடாது. புகார் அளித்தார்கள் என்பதற்காக போலீசாரும் உடனடியாக வழக்குப் பதிவுச் செய்யக் கூடாது. இன்றைய மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, ஆசிரியர்களை மிரட்டி பயமுறுத்துவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. புதிய தலைமுறைகளின் சிற்பிகள் தான் ஆசிரியர்கள். அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்’ என அரசுக்கும் காவல் துறைக்கும் அறிவுரை கூறியுள்ளார்.
நீதிபதியின் இவ்வறிவுரை கேரள மாநில ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வறிவுரை கேரள மாநில ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் பொருத்தமுடையதாகும்.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் என்னென்ன நடைமுறைகளைக் கையாளலாம் என்ற வழிகாட்டி நெறிமுறையைத் தமிழக அரசும் கல்வித்துறையும் உருவாக்க வேண்டும். என்றால் மட்டுமே ஆசிரியர்கள் அச்ச உணர்வின்றி சுதந்திரமாகத் தங்களின் கடமைகளைச் செய்ய முடியும். மாணவர்களையும் சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும்.
முனைவர் கமல. செல்வராஜ், தென்மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம் ஆசிரியர் கல்வி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...