
பழைய
ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழக அரசு
ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக
அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப்
புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம்
நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய
ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும்
என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன்
இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.
சாத்தியம்
உண்டு: உண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும்
நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை.
இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம்
பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், 6.14 லட்சம் பேர் புதிய
ஓய்வூதியத் திட்டத்திலும் உள்ளனர்.
ஊழியர்களின்
தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து
வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய
நிதியமாக வைத்துக்கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியச் செலவை அதன்
வட்டியிலிருந்து ஈடுகட்டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி
கிடைக்கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில்
செலுத்த வேண்டும்.
இன்றைய நிலவரப்படி, ஏற்கெனவே
ஓய்வு பெற்றுப் பழைய ஓய்வூதியம் பெறுவோர் 6.97 லட்சம் பேர். இவர்களுக்கான
ஓய்வூதியச் செலவு 2024-25இல் ரூ.37,663 கோடி. இது அரசின் மொத்தச் செலவான
ரூ.3.48 லட்சம் கோடியில் 10 சதவீதம்தான். புதிய ஓய்வூதியத் திட்டத்தில்
உள்ளவர்களில் 7,738 பேர் 2023-24இல் ஓய்வுபெற்றுவிட்டனர். சராசரியாக
8,000 பேர் ஓய்வு பெறுவர் என்றால், பழைய ஓய்வூதியதாரர்களில் இது ஒரு
சதவீதம்தான். ஓய்வூதியச் செலவான ரூ.37,763 கோடியிலும் இது ஒரு
சதவீதம்தான்.
ALSO READ:
» நாகை: பொதுத்தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வாழ்த்து
» ஆஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்
அதாவது
ரூ.376 கோடிதான் கூடுதல் செலவாகும். இதனை அரசு கையிலிருக்கும் நிதிய
வட்டியான ரூ.2,590 கோடியிலிருந்து ஈடுகட்டலாம். ஆனால், அதைச் செய்யாமல்
பழைய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்
திட்டம் ஆகியவை குறித்து ஆராய்வதற்குக் குழு அமைக்கப்படுவதை, வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல ஊழியர்கள் உணர்கின்றனர். மேலும், அறிக்கை
தர அந்தக் குழுவுக்கு 9 மாதங்கள் அவகாசம் கொடுத்திருப்பதும் அதிருப்தியை
ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசு செய்யும்
தவறு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத்
திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. மத்திய அரசு ஊழியர்
மறைந்தால், அவரது குடும்பத்துக்குப் பழைய ஓய்வூதிய விதிகளில் உள்ள
குடும்ப ஓய்வூதியமும், இறப்புப் பணிக்கொடையும் வழங்கப்படுகின்றன.
ஊனமுற்று விருப்ப ஓய்வில் சென்றால் பழைய ஓய்வூதிய விதிகளில், ‘இன்வேலிட்’
ஓய்வூதியமும் பணிக்கொடையும் கிடைக்கின்றன.
ஓய்வுபெறுபவருக்குப்
பணிக்கொடையும் ‘ஆனுவிட்டி’ (ஆண்டுத் தொகை) வடிவில் மாதந்தோறும்
உத்தரவாதம் இல்லாவிட்டாலும் ஓர் ஓய்வூதியம் கிடைக்கிறது. அரசுப்
பங்களிப்பு 14% கிடைக்கிறது. ஓய்வுபெற்றால் 60% எடுத்துக்கொள்ளலாம்.
40% ஆனுவிட்டியில் போட்டு, இறந்தபின் அந்த 40% குடும்பத்துக்குத்
திரும்பக் கிடைக்கும். தமிழக அரசு இதில் எதையும் செய்யாமல் மொத்தத்
தொகையையும் கொடுத்து அனுப்புகிறது.
கடந்த 2024
மே மாதம் வரை ஓய்வு, இறப்பு ஆகிய காரணங்களால் 38,129 பேர் பணியில் இல்லை.
மாதந்தோறும் ஒரு தொகை கிடைக்காதபோது, அதைப் பங்களிப்பு ஓய்வூதியம்
என்று சொல்வதில் அர்த்தமில்லை. பணிக்கொடைச் சட்டப்படி அனைவருக்கும்
பணிக்கொடை தந்தாக வேண்டும்.
பழைய ஓய்வூதியப்
பலன்கள்: ஆனாலும் புதிய ஓய்வூதியம் பழைய ஓய்வூதியத்துக்கு ஈடாகாது.
பழைய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள்
பணிக்கு மாநிலத்திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூதியமாகக்
கிடைக்கிறது. கம்யூட்டேஷன், குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கிறது.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850
கிடைக்கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல்
ஓய்வூதியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவை. புதிய திட்டத்தில் இல்லை.
இதற்காக
நடத்தப்பட்ட பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, உத்தரவாதமான 50%
ஓய்வூதியம்; அதில் 60% குடும்ப ஓய்வூதியம்; குறைந்தபட்ச ஓய்வூதியம்
ரூ.10,000; அகவிலைப்படியும் உண்டு எனக் கூறி ஒருங்கிணைந்த ஓய்வூதியத்
திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அது ஓய்வூதிய முறையின் நோக்கத்தையே
கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில்,
ஊழியரின் 10 சதவீதத்தோடு அரசும் 10% தரும். இரண்டும் சேர்ந்து ‘தனிநபர்
கார்பஸ்’ ஆகும். அரசு போடும் 8.5% ‘பூல் கார்பஸ்’ எனப்படும். தனிநபர்
கார்பஸ் சந்தையில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீட்டுத் தொகைக்கு
உத்தரவாதமில்லை.
ஓய்வு பெறும்போது ஊழியரின்
தனிநபர் கார்பஸ் முழுமையாக இருக்க வேண்டும். நடுவில் பணம் எடுக்காமல்,
ஒழுங்கான நேரத்தில் கட்டி, சந்தை நிலையாக இருந்தால் உங்கள் கார்பஸ் என்னவாக
இருக்குமோ அதற்கு ‘பெஞ்ச்மார்க் கார்பஸ்’ என்று பெயர். இதனை
பி.எஃப்.ஆர்.டி.ஏ.தான் தீர்மானிக்கும். அதற்கு ஒரு வரையறையும் இல்லை
என்பது கவனிக்கத்தக்கது.
ஒருங்கிணைந்த
ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள்: ஓய்வு பெறும்போது பணிக் காலம் 25 ஆண்டுகள்
இருந்தால், நேராக 12 மாத சராசரி சம்பளத்தின் 50% ஓய்வூதியமாகக்
கிடைக்காது. தனிநபர் கார்பஸ், பெஞ்ச்மார்க் கார்பஸுக்குக் குறையாமல்
இருக்க வேண்டும். தனிநபர் கார்பஸ் முழுவதையும் அரசின் பூல் கார்பஸுக்குத்
தாரை வார்க்க வேண்டும். அது திரும்பக் கிடைக்காது. அப்போதுதான் 50%
ஓய்வூதியம் கிடைக்கும். தனிநபர் கார்பஸ் குறைந்தால், அதே விகிதத்தில்
ஓய்வூதியமும் குறையும். தனிநபர் கார்பஸ் சந்தையில் வீழ்ந்துவிட்டால்
உங்கள் ஓய்வூதியமும் வீழ்ந்துவிடும் அபாயம் உண்டு.
ஓய்வு
பெறும்போது பணிக்காலம் 10 ஆண்டுகள் என்றால் சம்பளத்தில் 20%தான்
ஓய்வூதியமாகக் கிடைக்கும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 என்பது
தனிநபர் கார்பஸ், பெஞ்ச்மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருந்தால்தான்
கிடைக்கும். தனிநபர் கார்பஸ் குறைந்தால், குறைந்தபட்ச ஓய்வூதியமான
10,000 கிடைக்காது. தனிநபர் கார்பஸிலிருந்து 60% எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், உங்கள் ஓய்வூதியம் 60% குறைந்துவிடும். அதாவது, ஓய்வூதியம்
ரூ.10,000 என்றால் அதில் 60% குறைந்து, ரூ.4,000தான் ஓய்வூதியமாகக்
கிடைக்கும்.
அதேபோல் குடும்ப ஓய்வூதியம் 60%
என்ற கணக்கின்படி ஓய்வூதியம் ரூ.4,000 என்றால், அதில் 60% ரூ.2,400தான்
கிடைக்கும். குடும்ப ஓய்வூதியத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.10,000
என்கிற உத்தரவாதம் கிடையாது. எனவேதான், மத்திய அரசு இதனை ஓய்வூதியம்
என்று குறிப்பிடாமல் ‘பே அவுட்’ என்கிறது.
விருப்ப
ஓய்வு: விருப்ப ஓய்வு விவகாரத்தில் விநோதமான விதிமுறை
சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, 21 வயதில் பணிக்கு வரும் ஒருவர் 25
ஆண்டுகள் பணி செய்திருந்தால்தான், விருப்ப ஓய்வில் செல்ல முடியும்.
இதன்படி, அவர் தனது 46 வயதில் விருப்ப ஓய்வில் சென்றால், அவருக்கு எப்போது
ஓய்வு வயது 60 ஆகிறதோ அப்போதுதான். அதாவது, 14 ஆண்டுகள் கழித்துதான் ‘பே
அவுட்’ கிடைக்கும். இப்படி ஒரு விநோத விதிமுறை ஊழியர்களை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு
அறிவிக்கப்படும் அதே சதவீதத்தில் அகவிலைப்படி கிடைக்காது.
1.4.2025-க்குப் பின் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவார்கள்.
அகவிலைப்படியை மத்திய ஆவணப் பாதுகாப்பு முகமைதான் அறிவிக்கும் (central
record keeping agency), மத்திய அரசல்ல பழைய ஓய்வூதியத் திட்டத்தில்
இருப்பதில் என்னவெல்லாம் புதிய ஓய்வூதியத்தில் இல்லை என்று ஏற்கெனவே
குறிப்பிட்டிருக்கிறோமோ அவை எதுவும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்
திட்டத்திலும் கிடையாது. எனவேதான் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்
திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். அரசு இதில் உரிய முடிவை
எடுக்க வேண்டும்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...