
தேசிய பணப்பரிமாற்ற கார்ப்பரேஷன் இந்தியா எனப்படும் என்பிசிஐ வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இந்த விதிமுறயைல், ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கும் போது கொடுத்த செல்போன் எண்ணை தற்போது அவர் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வங்கிக் கணக்கே முடக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது. இதனைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அனைவரும், தங்களது வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்கள் என்ன என்பதை உறுதி செய்துகொண்டு, அது பழைய எண்ணாக இருந்தால், உடனடியாக வங்கிக்குச் சென்று பழைய எண்ணை மாற்றிவிட்டு தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணைக் கொடுத்துவிட்டால் போதும், உங்கள் வங்கிக் கணக்கு பாதுகாப்பாக செயல்படும்.
புதிய விதிமுறை என்ன?
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் பயன்பாட்டில் இல்லாமலோ அல்லது அந்த எண் 90 நாள்களுக்கும் மேல் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து அது புதிய செல்போன் பயனர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டிருந்தாலோ, அந்த எண் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நிதி மோசடி அல்லது தவறான வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புதல் போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் தான் எத்தனை வங்கிக் கணக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அவற்றுடன் என்னென்ன எண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவை பயன்பாட்டில் உள்ளதா? என்பதை அறிந்துகொண்டு, அவ்வாறு ஏதேனும் பழைய எண் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாக அந்த வங்கிக் கிளைக்குச் சென்று எண்ணை மாற்றிவிட்டு வரலாம்.
இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதால் இதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்து விடுவது நலம். அதன் பிறகு, வங்கிக் கணக்கு அல்லது செல்போன் எண்ணுடன் தொடர்பில் உள்ள ஜிபே, போன் பேக்கள் நீக்கப்படலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...