அவதுாறு வழக்கு ஒன்றில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சி.இ.ஓ., ஒருவருக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்த நடவடிக்கையை அடுத்து, மாநில அளவில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும், சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனங்கள் அனுமதி, பதவி உயர்வு இழுத்தடிப்பு, சம்பள நிர்ணயம், ஊக்கத்தொகை உட்பட பண பலன்கள் தொடர்பாக மாநில அளவில் 8,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில், பெரும்பான்மையான வழக்குகள் உதவி பெறும், சிறுபான்மை பள்ளிகளுக்கு உட்பட்டவை.
ஆசிரியர், அலுவலர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் அதிகாரிகள் அளவிலேயே பேசி முடிக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், இழுத்தடிப்பு காரணமாக நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறுகின்றன.
அங்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளையும், உரிய முறையில் அதிகாரிகள் பின்பற்றி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர தவறுவதால், அவதுாறு வழக்குகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, முதன்முறையாக முதன்மை கல்வி அலுவலர் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனால், அவதுாறு வழக்குகள் குறித்த விபரங்களை பட்டியலிட்டு, அவற்றின் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை, மதுரை சட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம், பதவி உயர்வு, பணப்பலன்கள் தொடர்பான அவதுாறு வழக்குகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு வரை கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அதுதொடர்பாகவும், அரசு கொள்கை முடிவுப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரைவுபடுத்த அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...