விழுப்புரம் :
விழுப்புரம் அருகே ஆதி திராவிடர் நல விடுதியில் பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்ய மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்த போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அடுத்த வளவனுாரில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். அதேபகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் காலை, மாலை என இரு வேளையிலும் அங்கு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே, மாணவர்களுக்கான உணவுத் தொகை வழங்கப்படும்.
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களில் சிலர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்வர்கள் என்பதால், அவர்கள் இரவு வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். மாணவர்களின் சாப்பாடுக கணக்கு காட்டுவதற்காக கிராமங்களில் உள்ள விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களை இரவு நேரத்தில் சரக்கு வாகனம் மூலம் வீட்டிலிருந்து விடுதிக்கு அழைத்து வந்து, பயோமெட்ரிக் கைரேகை வைத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் வளவனுார் ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கும் சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 12 மாணவர்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி விடுதிக்கு அழைத்து வந்து கைரேகை பதிவு செய்தனர்.
பின், மாணவர்களை ஏற்றிக் கொண்டு சாலையாம்பாளையம் வளைவில் திரும்பிய போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதில், வாகனத்தில் இருந்த மாணவர்கள் லேசான காயத்தோடு அதிர்ஷ்டவசமாக தப்பினர். கிராம மக்கள், மாணவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...