Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதியத் திட்டம் இருக்க வேறு எதற்கு?

download%20(5)
பழைய ஓய்வூதியத் திட்டம் இருக்க வேறு எதற்கு?

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் பொருளாதார புள்ளிவிவர கணிப்பின்படி, 2031 இல் முதியோா்களின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, முதுமை காரணமாகப் பிறரைச் சாா்ந்திருப்போா் எண்ணிக்கை 2031-இல் இது 20.1 % ஆக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இக் காலக்கட்டத்தில், 60 வயதைக் கடந்த பணி நிறைவு பெறும் மூத்த குடிமக்கள் மீது அரசு கவனம் அளிப்பது அவசியமாகிறது. ஆனால் அரசோ, அத்தகையோா் பாதிக்கப்படும் வகையில் தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருப்பது என்பது மிகவும் வருந்தத்தக்கது. முறைசாா்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்ககளுக்கே பழையபடி ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிறர் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அது குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என்பது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விரிவான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 1, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்கான அரசாணையை இந்திய நிதி அமைச்சகம் சனவரி 25, 2025 அன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இனிமேல் ஒன்றிய அரசுப் பணியில் சேரும் அரசு ஊழியர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறினால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஏற்கெனவே உள்ள தொகை, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டக் கணக்கிற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

1.4.2025 முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி 14%_லிருந்து 18.5 விழுக்காடாக அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ் இரண்டு கட்டமைப்பு நிதிகள் (Corpus Funds) உருவாக்கப்படும் என்றும் தனிநபர் கட்டமைப்பு நிதிக்கு அரசு ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 10% பங்களிப்பை வழங்குவதற்கு ஈடாக அரசும் அதற்கு சமமாக பங்களித்து வருவது அறியத்தக்கது. இது தவிர, அரசு கூடுதலாக 8.5% பங்களிப்புத் தொகை இதற்கு வழங்குகிறது. இவ்விரு நிதிகளை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நிர்வகிக்கும்.

2004 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள். ஒன்றிய அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த பின் அதனை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது ( UPS) தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் செயல்படும் மாற்றுத் திட்டமாகும். பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் முக்கிய நடைமுறை சிக்கல்களைக் களைந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் ஓய்வூதியர்களுக்கு நிதி நிலைத்தன்மை மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது.

இதன் தகுதிகளாக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு (VRS) பெறுபவர்கள் இவ் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் ஆவர். பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது பணியில் இருந்து தானாக விலகியவர்களுக்கு இந்த ஓய்வூதியம் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணி முடித்து பணி ஒய்வு பெறுபவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% இந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமும், 25 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்திற்குப் பணி செய்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. 10 அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுபவர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 10,000 ஓய்வூதியம் மட்டுமே கிடைக்கப் பெறுவார்கள்.

தவிர, இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு, அவரது மனைவி/கணவருக்கு அவர் ஏற்கனவே பெற்று வந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியம் கிடைக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்துடன் வழக்கமான அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது. 

இதனைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவையனைத்தும் தேன் தடவிய சுரண்டல் வார்த்தைகள் ஆகும் என்பதை மறந்து விடக்கூடாது. பணி செய்யும் காலத்தில் ஊழியர்களின் உழைப்பின் பலனை மாதந்தோறும் முழுதாகக் கிடைக்கச் செய்யாமல் அதன் ஒரு பகுதியை வேண்டுமென்றே சுரண்டி, அதற்கு சமமாக பங்களிப்பு செய்வதும் குறைந்த வட்டி அளிப்பதும் மக்கள் நலன் சார்ந்த அரசு செய்யும் நற்காரியம் ஆகாது. 

பணியின்போது மாத ஊதியமும் பணிநிறைவின்போது ஓய்வூதியமும் பெறுவதென்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் ஆகும். இதில், 'நீ நெல் கொண்டு வா!; நான் உயிருடன் கொஞ்சம் நொய்யும் தருகிறேன்' என்பதெல்லாம் சரியானதாக இருக்க முடியாது. ஒன்றிய அரசு ஏற்கெனவே நடைமுறைபடுத்தி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் காணப்படும் பங்களிப்பு ஓய்வூதியத்தில் வழங்கப்படும் பணிக்கொடையின் பலனை தமிழ்நாட்டில் திரிசங்கு நிலையில் உள்ள 1.4.2003 இல் பணிநியமனம் பெற்று பணி ஓய்வு பெற்றவர்கள் யாரும் அனுபவித்தது இல்லை என்பது தான் முழு உண்மை. இது சாமி கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையை என்னவென்பது?

ஒன்றிய அரசு அனுமதித்த தேசிய ஓய்வூதியத் திட்டம் வழங்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியமானது பணியாளர் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஊதியத்தில் கட்டாயம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பு நிதியுதவியுடன் அரசு செலுத்தும் 10% கூடுதல் பங்களிப்பு நிதியுதவியுடன் அவ்வக்கால வட்டியுடன் கணக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையும் ஒரேயடியாக வழங்கப்பட்டு வருவதை அறிவது இன்றியமையாதது. 

இவற்றுடன் எஞ்சிய ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்புகளை ஒப்படைப்பு செய்து காசாக்கிக் கொள்ளும் நடைமுறை இருப்பதும் அறியத்தக்கது. மற்றபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவாறு தற்போது 25 இலட்சம் அளவிலான பணிக்கொடை மற்றும் திரும்பச் செலுத்தும் வகையிலான ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறும் நடைமுறைகள் ஏதும் இதில் இல்லை. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருந்தால் கூட பணிக்கொடை பெறும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கும். இவைதவிர, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இறந்தோர் நிதியாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திருத்தியமைத்து மேலே குறிப்பிடப்பட்ட ஒருங்கிணைந்த அல்லது உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் முழுப் பலனையும் ஊழியர்கள் அனுபவிக்க அனுமதியளிக்குமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகும். அதற்குரிய பயனாளிகளும் அரசின் மீது முழு நம்பிக்கை எண்ணம் கொண்டு இப்பொழுதே பட்டு வேட்டி கனவில் மிதந்திட எண்ணுதல் கூடாது.

தொழிலாளர் நலனுக்கு எதிரான, அடிப்படை உரிமையை நசுக்கும் எத்தகைய முன்மொழிவையும் சிந்தித்து ஆராயாமல் நுனிப்புல் மேய்ந்து புளகாங்கிதம் அடைவது என்பது பேதைமையாகும். இது முதலாளித்துவம் விரிக்கும் மோச வலை எனலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொணராதிருக்க ஆயிரமாயிரம் காரணங்கள் இனியும் தேவையில்லை. 

ஒன்றுக்கும் உதவாத குழு எதற்கு? கால விரயம் எதற்கு? அதற்காக பண விரயம் எதற்கு? பல்லாயிரப் பக்க அறிக்கை எதற்கு? இவை எல்லாவற்றிற்கும் ஈடாக அதனைச் செம்மையாக நிறைவேற்றிட ஊழியர்கள் மீதான கொஞ்சம் கருணையும் ஒரு துளி மையும் மட்டும் போதுமே? 

காலம் கடத்தும் தாமதம் கூட ஒருவகையில் அநீதியே ஆகும். சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிரப்படும் பகடிப் பேச்சுகளும் கேலிச்சித்திரங்களும் கேலிப் படங்களும் அரசின் மீதான அவநம்பிக்கை மற்றும் அதிருப்தி ஆகியவை ஊழியர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளான மனவெளிப்பாடுகளாக இருப்பதை எளிதில் புறந்தள்ளவோ, கடந்து போகவோ முடியாது. இஃது எதிரிகளுக்குச் சாதகமாக அமைந்து விடக்கூடும். 

ஒரு நல்ல ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் உண்டுபண்ணி திருவிழா போல் நடக்கும் தேர்தல் அறுவடையில் நல்ல கண்டுமுதல் கண்டு விடலாம் என்று பகல் கனவு காண்பது நன்மை விளைவிக்காது. ஒவ்வொரு இடங்களிலும் ஊழியர்கள் செய்யும் பணியோ போதிய ஆட்கள் இல்லாமல் இரட்டிப்பாகி உள்ளது. மிகவும் கூடுதலான சுமை. இதுவரையில் இல்லாத வகையில் கண்காணிப்பும் கெடுபிடியும் மிகுதி. மாத ஊதியத்தைத் தவிர இதுவரை நிறுத்தி வைக்கப்பட்ட, திட்டமிட்டு ஒழித்த, வேண்டுமென்றே பறித்த, முழு நம்பிக்கை வைத்து இழந்த சலுகைகள் அனைத்தும் பாழுங்கிணற்றில் போடப்பட்ட பாறாங்கற்களாக மீட்பரின்றி அமிழ்ந்து கிடக்கும் கொடுமையை என்னவென்பது?

தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு இணங்க, ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், டில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டிப் போராடி வருகின்றனா். 

பணி ஓய்விற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு ஊழியரும் கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ அன்றும் இன்றும் என்றும் தேவைப்படுவது பழைய ஓய்வூதியத் திட்டமே அன்றி வேறில்லை. இதை ஒன்றிய, மாநில அரசுகள் புரிந்து கொள்ளுமா?

எழுத்தாளர் மணி கணேசன் 





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!