
இந்தப் பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவதை எடுத்துக் காட்டுவதாகவும் காலப்போக்கில் முன்மாதிரியான பள்ளிகளாகவும் இவை உருவெடுக்கும்.
மேலும், சுற்றுப்புறத்தில் உள்ள பிற பள்ளிகளுக்கும் தலைமைத்துவத்தை இவை வழங்குகின்றன. இத்தகைய பள்ளிகள் குழந்தைகளுக்குச் சமமான, உள்ளடக்கிய மற்றும் மகிழ்ச்சியான பள்ளிச் சூழலில் உயர்தர கல்வியை வழங்குவதில் அந்தந்த பகுதிகளில் முக்கியத்துவம் மிக்கதாக உள்ளன.
தவிர, இத்தகைய பள்ளிகளில் நிகழ்த்தப்படும் தேர்வு வெளிப்படையான அறைகூவல் முறையில் நடத்தப்படுவதாக உள்ளது. இதில் ஏனைய பள்ளிகள் தாமும் முன்மாதிரியான பள்ளிகளாக மாறுவதற்கான ஆதரவைப் பெற போட்டியிடுகின்றன. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு 5 ஆண்டுகளில் ரூ.27360 கோடியாகும். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.18128 கோடியாகும். மீதம் அந்தந்த மாநில அரசுகளின் பங்காகும்.
அதாவது, வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களில், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு 90 விழுக்காடு எனவும், ஏனைய மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் 60:40 எனும் அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒன்றிய தலைமை அமைச்சர் பள்ளிகள் மழலையர் குழந்தைகளுக்கு உகந்த கற்றல் பாடப்பொருள்கள், வெளிப்புற விளையாட்டுப் பொருட்கள் போன்ற அனைத்து கூறுகளையும் நிறைவு செய்வதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் கற்றல் பாடப்பொருள்கள், முழுமையாக பொருத்தப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள்/இயற்பியல் ஆய்வகம்/வேதியியல் ஆய்வகம்/உயிரியல் ஆய்வகம், திறன்மிகு வகுப்பறைகள், கணினி ஆய்வகம்/தொழில்நுட்ப ஆய்வகம், அடல் டிங்கரிங் ஆய்வகம், திறன் ஆய்வகம், பள்ளிப் புத்தாக்கக் குழு , நன்கு பொருத்தப்பட்ட விளையாட்டு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் போன்றவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
நீர் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி, மின்சார உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வாழ்க்கை முறையை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் பசுமை பள்ளிகளாகவும் இவை உருவாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மொத்தமுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்/நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஆகியவை உள்ளடக்கிய 34 பகுதிகளில் ஒன்றிய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன . இவற்றுள் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் கேவிஎஸ்/என்விஎஸ் பள்ளிகளில் இருந்து நான்கு கட்டங்களாக மொத்தம் 12,079 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . அவற்றில் 1329 தொடக்கப் பள்ளிகள், 3340 நடுநிலைப் பள்ளிகள், 2921 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 4489 மேல்நிலைப் பள்ளிகள் அடக்கம்.
இத்திட்டத்தில் இதுவரை தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்கள் இணையவில்லை. குறிப்பாக, திராவிட மாடல் அரசானது தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்து செயல்படுத்திட மும்மொழி கொள்கையில் விலக்கு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க தற்போதைய ஒன்றிய அரசு மறுத்து விட்டதால் இத்திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது.
மேலும், இதன் விளைவாக ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு 2024 - 2025 நிதியாண்டில் 3 தவணைகளாக உறுதியளித்தபடி வழங்கப்பட வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை நிறுத்தி வைத்துள்ளதாக ஊடகம் வழியாகப் பேசுபொருள் ஆகியிருப்பது வேதனைக்குரியது.
PM SHRI திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு நிதி தர ஒன்றிய அரசு மறுப்பதும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அத்திட்டத்தில் இணைந்தால் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு எதிர்ப்பதும் தமிழ்நாட்டின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
இருவேறு எதிரெதிர் துருவங்களைக் கொண்ட அரசுகள் ஆதிக்கம் மற்றும் உரிமை போட்டியில் நசிந்து நலிவுற்றுப் போவது ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வி தான். இதை இருதரப்பினரும் தம் தீவிர பிடிவாதத்தைத் தம் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடமளிக்காமல் ஒதுக்கி வைத்து அப்பாவிக் குழந்தைகளின் நலனைக் கருத்திலும் கவனத்திலும் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது.
நெற்றிப்
பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டும் செயல் ஒருபோதும் ஏற்கத்தக்க
செயலன்று. கசப்பு மருந்து என்றால் கூட பரவாயில்லை. கொடிய நஞ்சு என்பதை
எவ்வாறு ஏற்கவியலும் என்பது பலரது கேள்வியாக இருப்பதைப் புறந்தள்ள
முடியாது. ஆம். ஒன்றிய அரசு முன்மொழிந்தது தேசியக் கல்விக் கொள்கை ஆகா.
சனாதனமும் குருகுலக் கல்வியும் மறு கட்டமைப்பு செய்யப்படும் தேசிய காவிக்
கொள்கையாக அப்புதியக் கல்விக் கொள்கை இருப்பதாக கல்வியாளர்களின் பலரின்
ஏகோபித்த கருத்தும் பயமும் ஆகும்.
திணிப்பு என்பது மீண்டும் தெறித்து வந்து விழுமேயன்றி, உட்கிரகிக்கும் தன்மை அற்றது. மும்மொழிக் கொள்கையையும் அனைவருக்கும் கட்டாய, சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்யும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை கல்வி உரிமையைக் கேள்வி மற்றும் கேலிக்கு உள்ளாக்கும் நவீன வருணாசிரம குலக்கல்வித் திட்டமாகத் தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் இருப்பதை மறுபரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.
ஏனெனில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் இன்றைய புதிய தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக விளங்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டிப் போட்டுக் கொண்டு உலக அரங்கில் தம்மை முன்னிலைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், உலக அளவில் அதிக மக்கள் தொகையுடன் அறிவு வளர்ச்சி மற்றும் புத்தாக்க ஆற்றலில் தனித்துவம் மிக்க இந்திய துணைக்கண்டத்தினை மாறாக குறுகிய, பழைமைவாத, பிற்போக்கு, மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தி இருண்ட காலத்தை நோக்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்வதை யாராலும் ஒருக்காலும் ஏற்க முடியாது.
குறிப்பாக, இதைக் கல்வியில் துளியும் அனுமதிக்க முடியாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மலர்ந்து ஒளிர வேண்டிய கல்வியில் அடிமைத்தனம், மதவாதம், பிரிவினைவாதம் படிவது என்பது இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை என்பதை உணர்தல் நல்லது.
இந்துத்துவ
நலனை விட இந்திய நலனே இன்றியமையாதது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொண்டு
மாநிலங்கள் முன்வைக்கும் உரிய, உகந்த கருத்துகளைப் பரிவுடன் ஏற்று தக்க
திருத்தம் மேற்கொண்டு மாநில சுயாட்சி நலனைப் பேணிக் காக்க வேண்டியது அவசர
அவசியமாகும்.
சொந்த சுய இலாபத்திற்காக 140 கோடி மக்களின் உணர்வுகளை மறுதலிப்பதும் 6 கோடி மக்களின் அடிப்படை வாழ்வாதார கல்வி உரிமையில் கைவைப்பதும் நன்றன்று. இவையனைத்தும் மக்களின் வரிப்பணம் ஆகும். இஃது யார் வீட்டுச் சொந்த பரம்பரை பணம் அல்ல, கொடுக்க முடியாது என்று சொல்லவும் பிற மாநிலங்களுக்குத் தாரை வார்க்கவும். மேலும், இதுபோன்ற செயல் மாநில கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாக அமையாதா?
அதுபோலவே, மாநில அரசும் மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்கிற மனநிலையில் எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே கட்டாயம் நிலவ வேண்டிய சுமுக உறவு கெடும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக நீதிக்கும் நல்ல தரமான கல்வி முறைக்கும் பன்மைத்துவம் நிறைந்த இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் கலைத்திட்ட உருவாக்க நெறிமுறைகளுக்கும் கிஞ்சிற்றும் குந்தகம் ஏற்படுத்தாத நல்லனவற்றை மனம் திறந்து ஏற்பதும் இங்கு அவசியமாகிறது.
ஒன்றிய அரசின் இதுபோன்ற மாற்றாந்தாய் மனப்பான்மை மற்றும் மாநில அரசின் விடாப்பிடி மனநிலை ஆகியவற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாக இருப்பது ஏழை, எளிய, அடித்தட்டு, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர் போன்றோர் ஆவர்.
இதில் ஆசிரியர்களின் இரு தரப்பு மீதான நியாயமான குரல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு சமுதாய விடியலுக்கு அது பேருதவியாக அமையும். ஏனெனில் இந்த குடுமிப்பிடிச் சண்டையில் மாணவர்களுக்கு அடுத்தபடியாக பாதிக்கப்படும் சமூகம் ஆசிரியர் பெருமக்கள் என்பதை உணருதல் நல்லது.
இந்திய அளவில் கல்வி சார்ந்த முன்னெடுப்புகளில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்குவதாக மாற்றுக் கருத்து இருந்தாலும் மனம் திறந்து பாராட்டி மகிழும் ஒன்றிய அரசு தாயுள்ளத்துடன் அடம் பிடிக்கும் பிள்ளையை அம்போவென்று ஒரேயடியாகக் கைவிடாமல் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பம் ஆகும். ஏனெனில், மாநிலக் கல்வியின் மூச்சு தங்கு தடையின்றி உயிர்த்திருப்பது இன்றியமையாதது. அது நாட்டின் நலனும் கூட. ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மேன்மேலும் சிறக்க இரு அரசுகளின் ஒருங்கிணைப்பு அவசியம் அல்லவா?
எழுத்தாளர் மணி கணேசன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...