Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய வருமான வரிச் சட்டம் - புதிதாய் என்ன சொல்கிறது?

 1350641

இதோ வந்து விட்டது - புதிய வருமான வரிச் சட்ட வரைவு மசோதா. இது எந்த அளவுக்கு நமது எதிர்பார்ப்புகளை நம்பிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறது..?

வரைவு மசோதா, தொடக்கத்தில் இப்படிச் சொல்கிறது: இப்போது உள்ள வருமான வரி சட்டம் 1961, கடந்த 60 ஆண்டுகளில் எண்ணற்ற திருத்தங்களைக் கண்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானம் அதிக சுமைகளை தாங்கி விட்டது; இதன் மொழி மிகவும் சிக்கலானதாக உள்ளது; வரி செலுத்துவோருக்கு அதிக செலவு தருவதாய், நேரடி வரி நிர்வாகத்தின் திறனுக்குத் தடையாய் இருக்கிறது.

வரி நிர்வாகத்தினர், வரி நிபுணர்கள் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் கட்டுமானம் மற்றும் சிக்கல்கள் குறித்து கவலை எழுப்பி உள்ளனர். ஆகவே, எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான சுருக்கமான சட்டம் உருவாக்க, வருமானவரிச் சட்டம் 1961 முழுவதுமாக மீள்பார்வை செய்யப்படும் என்று ஜூலை 2024 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணம் நிறைவேறியதா..?

536 பிரிவுகள், 16 அட்டவணைகள் கொண்ட 566 பக்க புதிய சட்டம் - 'எளிமையாக படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக சுருக்கமாக' விளங்குவதாய்ச் சொல்ல இயலுமா..? மன்னிக்கவும்; 'முதல் பார்வையில்' அப்படிச் சொல்ல இயலவில்லை.

இப்போதைக்கு, ஒரு நல்ல செய்தி உடனடியாகக் கண்ணில் படுகிறது. நாம் பலமுறை விடுத்த வேண்டுகோள் நிறைவேறி இருக்கிறது. நிதி ஆண்டு - மதிப்பீட்டு ஆண்டு என்று தனித்தனியே குறிப்பிட வேண்டிய தேவை என்ன..? ஒன்று மட்டும் இருந்தால் போதாதா..? புதிய வருமான வரி சட்டத்தில் இது நீக்கப்பட்டு விட்டது. 'வரி ஆண்டு' மட்டுமே உள்ளது! நிச்சயம் பாராட்டுக்கு உரியது.

அதேசமயம், தற்போது நிதியாண்டு ஏப்ரல் 1 தொடங்கி மார்ச் 31 வரை உள்ளது. இதனை மாற்றி நாட்காட்டி ஆண்டுக்கு (Calendar Year) ஏற்ப ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என்று மாற்றி அமைக்க வேண்டும் என்கிற வெகு நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம்.

ஜவஹர்லால் நேரு காலத்தில் தொடங்கி 70 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்காட்டி ஆண்டையே நிதியாண்டாகக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, ஜவஹர்லால் நேருவும் அதற்கு உடன்பட்டு, அடுத்தடுத்து வந்த அரசுகளும், வெவ்வேறு குழுக்களும் தொடர்ந்து ஆதரித்து ஆமோதித்து உள்ள போதிலும் புதிய வருமான வரி சட்ட மசோதா கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை. இந்த மாற்றம், வரி செலுத்தும் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

உதாரணத்துக்கு, இரண்டு வாக்கியங்கள்: ஒன்று - '2025-26-ல் வருமானம் எவ்வளவு .?' மற்றது - '2025-ல் வருமானம் எவ்வளவு..?' இரண்டாம் கேள்வி எத்தனை எளிதாக இருக்கிறது ...? ஏன் இந்த மாற்றம் செய்யப் படவில்லை..? இன்னமும் கூட, வரிச் சட்டங்கள் அத்தனை எளிதில் யாருக்கும் புரிந்து விடக்கூடாது என்கிற அதிகார வர்க்கத்தின் நல்ல எண்ணம் புதிய வருமான வரி சட்டத்திலும் தொடர்கிறது!

இதேபோல, ஏற்றுக் கொள்ள முடியாத மற்றொன்று - மொத்த வருமானத்தைக் கணக்கிடுவதில் அனுமதிக்கப்படும் கழிவுகள். எப்போதும் போல ஆயுள் காப்பீடு / மருத்துவ காப்பீடு தவணைத் தொகை, வீட்டுக் கடன் மீதான வட்டித் தொகை ஆகியவற்றுக்கு 'வரம்பு' வைக்கிற சட்டம், பிரிவு 136, 137இன் கீழ் அனுமதிக்கப்படும் கழிவுக்கு வரம்பு ஏதும் வைக்கவில்லை. ஏன் ..? காரணம், இவை அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடை மீதான கழிவுகள். அதாவது அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவும் நிதி வழங்கலாம்: வருமான வரியில் இருந்து கழிவு பெறலாம். சரி, விடுங்கள்; யார் இதனைப் பெரிதாகப் பேசப் போகிறார்கள்?

நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் அரசு மிக உறுதியாய் 'ஏதேனும்' செய்து இருக்கலாம் என்று தோன்றுகிற இரண்டு அம்சங்கள், புதிய சட்ட மசோதாவில் அப்படியே தொடர்கின்றன. அறக்கட்டளை வருமானம், விவசாய வருமானம் - இரண்டும் வருமானவரியில் இருந்து விலக்கு பெற்றவை.

அறக்கட்டளைக்கு வரும் வருமானத்தில் வரி செலுத்தி விட்டு மீதத் தொகையில் அறப்பணி செய்தால் ஆகாதா? வணிக நோக்கத்துடன் செயல்படும், அளவின்றி வருமானம் ஈட்டும் மருத்துவமனைகள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அறக்கட்டளையின் பெயரால் வருமான வரியில் இருந்து விலக்கு பெறுவதைத் தொடர்ந்து அனுமதித்தல் எந்த வகையில் நியாயம்?

ஏழை விவசாயிகளின் வருமானத்துக்கு வரிவிலக்கு - முற்றிலும் நியாயமானது. முழு மனதுடன் வரவேற்கலாம். அதே நேரம், எத்தனை செல்வந்தர்கள், பல இயக்க விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு, பல சமயங்களில் அங்கே விவசாயமும் செய்யாமல், பிற வழிகளில் தமக்கு வந்த வருமானத்தை விவசாய வருமானமாய்க் காட்டி, வருமான வரி விலக்கு பெற முடிகிறது.

புதிய சட்டத்திலும் இந்த அவலம் தொடர்கிறது. மேற்சொன்ன இரண்டு அம்சங்கள் குறித்தும் அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை அன்று. அறக்கட்டளை வருமானம், விவசாய வருமானத்துக்கு வரம்பு வைத்து, வரி விதிக்கலாம்; தவறில்லை. ஆனால், பயனாளிகள் எவ்வாறு தமக்கு எதிராகவே பேசுவார்கள்?

பல நூறு பக்கங்களுக்கு நீளும் புதிய வருமான வரி மசோதா பல்வேறு நல்ல அம்சங்களையும் கொண்டுள்ளது. வரவேற்கத்தக்க நல்ல அம்சங்கள் நிறையவே உள்ளன. அது குறித்துப் பிறகு பார்ப்போம். இப்போதைக்கு 'புதிய பார்வை' 'புதிய பாதை' என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும், 1961 சட்டத்தை விடவும் புதிய சட்டம், சில / பல அம்சங்களில் எளிமையாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

நேரடி வரி நிர்வாகம் மீதான அரசின் பார்வை இன்னமும் தெளிவாய் தீர்க்கமாய் இருந்து இருக்கலாம். ஒருவேளை மசோதாவின் நிறைவில் அது நிறைவேறலாம்.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!