Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவில் 56 மொழிகள் ‘இந்தி’யால் அழிக்கப்பட்டுள்ளது - அன்பில் மகேஷ் பதிலடி

3images
இந்தியாவில் 56 மொழிகள் ‘இந்தி’யால் அழிக்கப்பட்டுள்ளது. தமிழ் வரலாறு மறைக்கப்படும் என்பதால் தேசிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என்று ஒன்றிய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்து உள்ளார்.

திருச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 3,5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை இடம்பெற்றுள்ளது. வொக்கேஷனல் பிரிவானது 6ம் வகுப்பில் இருந்து கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கொள்கைகளால் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது அதிகமாகும் சூழல் உள்ளது. எனவே, நாம் அதை ஏற்க மறுப்பு தெரிவிக்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 16 சதவீதமாக இருந்த இடை நிற்றலை 5 சதவீதமாக குறைத்துள்ளோம். இரு மொழி கொள்கை என்பதை முன்நிறுத்தி துணை முதல்வர், தோழமை கட்சிகள், மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர். கோலம் போட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மாணவர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும், எழுச்சி உரைகள் மூலமாகவும், கருத்தரங்கள் மூலமாகவும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

ஒன்றிய அரசிடம் நாம் வைக்கும் ஒரே கோரிக்கை மீண்டும் இன்னொரு மொழிப்போரை கொண்டு வந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்கான கண்டனமாக இதை பதிவு செய்கிறோம். ஒன்றிய அமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தமிழில் சிறப்பையும், தமிழ்நாட்டு கல்வியின் தரத்தையும், தமிழ் நாட்டை குறித்தும் சிறப்பாக பேசியுள்ளார். இளைய சமுதாயத்தை மனதில் வைத்து தான் இந்த மும்மொழி கொள்கை கொண்டுவரப்படுவதாக கூறியிருக்கிறார். இளைஞர்களையும், இளைய சமுதாயத்தையும் மனதில் வைத்து இதை கொண்டு வந்தால் அதற்கு ஏன் கண்டிஷன் போட வேண்டும். எனவே, எந்த ஒரு கண்டிஷன்களும் இல்லாமல் இருக்க வேண்டும்.

இன்று மருத்துவம், பொறியியல், சுகாதாரம், ஆராய்ச்சிகள், இஸ்ரோ வரை இன்று எந்த துறைகளை எடுத்தாலும் இருமொழி கொள்கையை பயின்ற தமிழக மாணவர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் பயின்று இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றி ஒரு வளர்ந்த சமூகத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம். இன்று அநேக உயர்ந்த இடங்களிலும் பதவிகளிலும் இந்த இரு மொழிக் கொள்கையில் பயின்றவர்கள் தான் இருக்கிறார்கள். எனவே, யாரிடமும் எந்தவித கருத்துகளும் கேட்கப்படாமல் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உடன் நாங்கள் இதைக் கூறவில்லை, அதைக் கூறவில்லை என்று பல்வேறு கருத்துகளை ஒன்றிய அரசு முன் வைக்கிறார்கள். தூண்டிலை போட்டுவிட்டு மீன் சிக்காதா என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கக்கூடிய 56 மொழிகள் இன்று இந்தி மொழியால் விழுங்கபட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவருடைய சொந்த மொழியான ஒடியாவும் இந்த இந்தியால் விழுங்கப்பட்டுள்ளது. இப்படி கண்ணுக்கு தெரியாமல், தெரிந்தும் பல மொழிகள் இந்தி மொழியால் அழிந்துவிட்டது. எனவே, நம்முடைய தாய் மொழியான தமிழ் அழிந்து விடாமல் இருப்பதற்கு இந்த உலக தாய்மொழி தின நாளில் நான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டு வரலாற்றை அவர்கள் மாற்றி விடுவார்கள். 1968 முதல் அண்ணா உருவாக்கிய இருமொழிக்கொள்கையை தமிழகம் பின்பற்றுகிறது. அண்ணா முதல் ஜெயலலிதா வரை எதிர்த்த மும்மொழி கொள்கையை முதல்வரும் எதிர்கிறார்.

மூன்றாவது மொழி கற்பது மொழி திணிப்பு, மாநில உரிமையை பறிப்பதாக அமைகிறது. 3வது மொழியை திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். மாணவன் காலில் சங்கிலியை கட்டி ஓட விடும் பணியை ஒன்றிய அரசு செய்கிறது. தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது. ஒன்றிய அரசால் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது. பிஎம் ஸ்ரீ கொள்கையை ஏற்க மறுத்தால் ரூ.5000 கோடி இழப்பீடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே, ஒன்றிய அரசு நிபந்தனையின்றி நிதியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவருடைய சொந்த மொழியான ஒடியாவும் இந்த இந்தியால் விழுங்கப்பட்டுள்ளது. இப்படி கண்ணுக்கு தெரியாமல், தெரிந்தும் பல மொழிகள் இந்தி மொழியால் அழிந்துவிட்டது.

* ‘இந்த மொழியை படி என்று திணிக்க உரிமையே இல்லை’

தர்மேந்திர பிரதான் ஒன்றிய அமைச்சர் தேசிய கல்விகொள்கையை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் என்ற நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘நாங்கள் அதை அவரிடம் கேட்கிறோம். நீங்கள் இதை அரசியல் ஆக்காதீர்கள். ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள். நாங்கள் கேட்க வேண்டியதெல்லாம் அவர் கேட்கிறார். இந்த மொழியை படி என்று திணிப்பதற்கு உங்களுக்கு உரிமையே இல்லை. முதலில் எங்களை அழைத்து பேச வேண்டும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை’ என்றார்.

* தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பது ஏன்?

1. தமிழ்நாடு 1968ம் ஆண்டு முதல், முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை உருவாக்கிய இரு மொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. உலகின் பழமையான உயிர்ப்புள்ள மொழிகளில் ஒன்றான தமிழை, தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தின் மையமாக பாதுகாக்க இது உறுதி பூண்டுள்ளது. மூன்றாவது மொழியை திணிப்பது இந்த பாரம்பரியத்தை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

2. தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உயர் படிப்பறிவு விகிதத்தையும் கல்வி சாதனைகளையும் அளித்துள்ளது. தமிழை தாய்மொழியாகவும், ஆங்கிலத்தை உலக இணைப்பு மொழியாகவும் மையப்படுத்தி, உள்ளூர் தேவைகளுக்கும் சர்வதேச போட்டித்திறனுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்களை மூன்றாவது மொழியால் அலைக்கழிக்காமல், கடந்த 50 ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை தந்துள்ளது.

3. இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் கல்வி உள்ளது. இது மாநிலங்களுக்கு அவற்றின் தனித்துவமான மொழி மற்றும் பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப கொள்கைகளை வடிவமைக்க உரிமை அளிக்கிறது. மூன்று மொழிக் கொள்கையை நிராகரிப்பது இந்த கூட்டாட்சி கொள்கையுடன் ஒத்துப்போகிறது. மூன்றாவது மொழியை திணிப்பது இந்த அரசியலமைப்பு சட்டத்தையும் மாநில உரிமையையும் மீறுகிறது.

4. மூன்று மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியாக பார்க்கப்படுகிறது. 1937 மற்றும் 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் வேரூன்றிய இந்த கவலை, தமிழ் அடையாளத்திற்கு எதிரான அத்துமீறலாக உள்ளது. இதை அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் உறுதியாக எதிர்த்தனர்.

5. மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது, இந்தி தவிர பிற மொழிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களை உருவாக்கும். இது மாணவர்களை இந்தியை கற்க வற்புறுத்தலாம். இது தேசிய கல்வி கொள்கை தேர்வு உரிமையை மீறும். இரு மொழி முறையோ, ஏற்கனவே உள்ள வலுவான உள்கட்டமைப்புடன் நன்கு நிறுவப்பட்டுள்ளது.

6. ஆரம்ப காலத்தில் குறைவான மொழிகளை கற்பது மாணவர்களுக்கு பயனளிக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டின் கொள்கை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சியை உறுதி செய்கிறது. இது உள்ளூர் மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு போதுமானது. மூன்று மொழிகளை திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்கிறது.

7. தமிழ்நாடு இந்தி போன்ற மொழிகளை கற்பதை தடை செய்யவில்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே தன்னார்வ கற்றலை ஊக்குவிக்கிறது. தக்ஷிண பாரத் இந்தி பிரசார் சபா போன்ற நிறுவனங்கள் மாநிலத்தில் செழித்து வளர்கின்றன. கட்டாயம் தேவையில்லை என்பதை இது நிரூபிக்கிறது.

8. சி.என்.அண்ணாதுரை, பன்மொழி சமூகமான இந்தியாவில், அதிகாரப்பூர்வ மொழி அனைத்து மொழி குழுக்களுக்கும் சம தூரத்தில் இருக்க வேண்டும் என வாதிட்டார். ஆங்கிலம் இதை திறம்பட செய்கிறது, ஆனால் மூன்றாவது மொழி (பெரும்பாலும் இந்தி) ஒரு மொழி குழுவை ஆதரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.

9. 1976ம் ஆண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் விதி 1(ii) படி, தமிழ்நாடு 1963ம் ஆண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்திலிருந்து விலக்கு பெற்றுள்ளது. இது மாநிலத்தின் தனித்துவமான மொழி நிலைப்பாட்டை மதிக்கிறது, அதை தேசிய கல்வி கொள்கை மீறக்கூடாது.

10. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன. எட்டு தசாப்தங்களாக மக்கள் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக வெளிப்பாடுகள் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதை புறக்கணிப்பது மக்களை புண்படுத்தும்.

11. மூன்றாவது மொழி இல்லாதது வாய்ப்புகளை கட்டுப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் தொழில்முறையாளர்கள் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் சிறப்பாக உள்ளனர். மாநிலத்தின் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புலம்பெயர் வெற்றி இதை நிரூபிக்கிறது.

12. நிதி அழுத்தம் அல்லது கொள்கை திணிப்புக்கு பதிலாக, தமிழ்நாடு கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது. தமிழ்நாட்டின் வெற்றிகரமான இரு மொழி மாதிரியை மதிக்க வேண்டும். ஒருமைப்பாட்டை விட பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும். இந்த புள்ளிகள், தமிழ்நாட்டின் வரலாற்று உறுதிப்பாடு, நடைமுறை சாதனைகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை வலியுறுத்தி, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்குள் பரஸ்பர மரியாதையை வேண்டுகிறது.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!