Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு மருத்துவர் பணி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற 400 பேரை தகுதி நீக்கம்

1352034
அரசு மருத்துவர் பணிக்கு தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 400 மருத்துவர்களை தகுதியில்லாதவர்கள் எனக் கூறுவது நியாயமில்லை என்று பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்த தேர்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். 14,855 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையில், கூடுதலாக 89 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்பில் 4,585 மருத்துவர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இன்று மாலையுடன் கலந்தாய்வு நிறைவடைந்தது. தேர்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 26-ம் தேதி வழங்கவுள்ளார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பின்படி, கடந்த 2024-ம் ஜூலை 15-ம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள் மட்டுமே, உதவி மருத்துவர் பணிக்கு தகுதி பெற்றவர்கள். ஆனால், ஜூலை 15-ம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள் ஏராளமானோர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். அதில், 400 மருத்துவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்றுள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்ற 400 மருத்துவர்கள் தகுதியில்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அந்த மருத்துவர்கள் கூறியது: “நாங்கள் 400 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவர் ஆகியுள்ளோம். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஜூலை 15-ம் தேதிக்கு முன்பாக நிரந்த பதிவு சான்றிதழ் பெறாததற்கு நிர்வாகத்தின் தாமதமே காரணம் ஆகும். 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஜூலை 10-ம் தேதியும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூலை 15-ம் தேதியும் தான் PPC2 சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஒரு நாளில் 250 பேர் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆன்லைனில் பதிவு செய்து, நேர்காணல் செல்ல இருக்கும் நிலையில், ஜூலை 13, 14 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருந்ததால், நிரந்தர பதிவு சான்றிதழ் பெற முடியவில்லை.

அதனால், தற்காலிக பதிவு சான்றிதழை வைத்து விண்ணப்பித்து, தேர்வு எழுதினோம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக, நிரந்தர பதிவு சான்றிதழ் பெற்று வைத்திருந்தோம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது எங்கள் தரப்பு விவரங்களை கடிதமாக கொடுத்தோம். ஆனால், தேர்வானவர்களின் பட்டியலில் எங்கள் 400 மருத்துவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. எங்களை தகுதியற்றவர்கள் என கூறுவது நியாயமற்றது. முதல் தலைமுறை மருத்துவர்களான நாங்கள் கடின உழைப்பினால் மதிப்பெண் பெற்றும் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், எங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஜூலை 15-ம் தேதிக்கு முன்பே நான்கரை ஆண்டுகள் எம்பிபிஎஸ் படிப்பும், ஓர் ஆண்டு பயிற்சி மருத்துவர் காலத்தையும் முழுமையாக பூர்த்தி செய்த நாங்கள் 400 மருத்துவர்களும், உதவி மருத்துவர் நியமனத்துக்கு தகுதியானவர்கள். கலங்கி நிற்கும், இளம் மருத்துவர்களாகிய எங்களுக்கு நல்வழியை தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!