16 முதல் 18 வயதுக்குள் நடக்கும் குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் காதல் திருமணமாக உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான எந்த வகையான துன்புறுத்தல் குறித்தும் அவர்களுக்கான ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதில் குழந்தை திருமணம் செய்வதற்கு பெற்றோர் ஏற்பாடு செய்வதாக வரும் புகார்களே அதிகம்.
மதுரை மாவட்டத்தில் மாதம் சராசரியாக 130 முதல் 150 அழைப்புகள் வருகின்றன. டிசம்பர் முதல் மே வரை குழந்தை திருமணம் செய்ய முயல்வதாக மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட குழந்தைகள் நல அலகு மூலம் கவுன்சிலிங் கொடுக்கும் போது தான் காதல் பிரச்னை வெளியே வருகிறது. பெற்றோர் கண்டிக்கும் போது பிள்ளைகள் முந்திக் கொண்டு புகார் செய்கின்றனர்.
ஆண்டுதோறும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட 900 பேருக்கு காதல் என்ற பெயரில் குழந்தை திருமணம் நடக்கிறது. இணையதளத்தில் ஆபாச தளங்களை அதிகம் பயன்படுத்துவதும் ஒரு காரணம் என்கின்றனர் சமூகநல ஆலோசகர்கள்.
சமூகநலத்துறை தரப்பில் கூறியதாவது:
ஜூன், ஜூலையில் கல்விக்கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்படுவதாக பள்ளிகள் குறித்தும் புகார்கள் வருகின்றன. அதேபோல சித்திரைத்திருவிழா உட்பட கோயில் திருவிழாக்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்க வருவோர் அதிகம்.
அதுகுறித்தும் புகார்கள் வருகின்றன. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை போட்டால் கூட உடனடியாக பிள்ளைகளை அடித்து விட்டதாக புகார் செய்கின்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை தம்பி எழுப்பி விட்டதாக அந்நேரத்தில் 13 வயது அண்ணன் புகார் தெரிவித்தது ஆச்சர்யம். 1098 குறித்த அதிக விழிப்புணர்வே இதுபோன்ற புகார்கள் வர காரணம்.
இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...