கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகுதி, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான புதிய விதிமுறைகளை வகுத்து, திருத்தம் செய்த வரைவை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பிற பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த விதிமுறைகளை திருத்தம் செய்துள்ளது.
2018-ம் ஆண்டின் "பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்" என்ற விதிமுறைகளை திருத்தம் செய்து, "பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு அளிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் (2025) விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்" என்ற வரைவை உருவாக்கியுள்ளது.
இதனுடன், பணியாளர் விகிதம், காலம் மற்றும் உறுதிப்படுத்தல், விடுப்பு, கற்பித்தல் நாட்கள், கல்வி ஆராய்ச்சி மற்றும் நிர்வாக கடமைகள், மூப்புரிமை மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களுக்கான தொழில்முறை நெறிமுறைகள் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களையும் உருவாக்கியுள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய வரைவு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டார். தற்போது இந்த வரைவின் மீது ஏதேனும் கருத்துகள் இருந்தால் யுஜிசி இணையதளத்தில் அதை படித்த பின், கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி வாயிலாக கருத்து தெரிவிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் மனிஷ் ஜோஷி அறிவித்துள்ளார். இதற்காக புதிய வரைவு யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
துணைவேந்தர் நியமனம்:
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழுவில் ஆளுநர் ஒருவரையும், பல்கலைக்கழகம் சார்பாக ஒருவர் மற்றும் மாநில அரசு சார்பாக ஒருவர் என மூவர் இருப்பர்.
இந்த புதிய நெறிமுறைப்படி துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை பல்கலை வேந்தர் மட்டுமே நியமனம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆளுநர் ஒருவரையும், யுஜிசி தலைவர் ஒருவரையும், பல்கலைக்கழகம் ஒருவரையும் நியமனம் செய்வர் என கூறப்பட்டுள்ளது.
தேடுதல் குழுவில் மாநில அரசு ஒருவரை நியமனம் செய்வதற்கான வாய்ப்பு இந்த புதிய நெறிமுறையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு புதிய வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிப்பது எப்படி?
பொதுமக்கள் இந்த வரைவு விதிமுறைகள் குறித்த தங்கள் கருத்துக்களை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு முன்னதாக regulations@ugc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...