நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 28-ல் தொடங்கி நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வெழுத லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் எந்தெந்த நாளில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பிஇ, பிடெக் படிப்புக்கான முதல் தாள் தேர்வு ஜனவரி 22, 23, 24 மற்றும் 28, 29-ம் தேதிகளில் காலை, மாலை என இருவேளைகளாக நடத்தப்படும். அதேபோல், பிஆர்க், பி.பிளானிங் படிப்புக்கான 2-ம் தாள் தேர்வு ஜனவரி 30-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இதன் விவரங்களை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...