ஊட்டியில், தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கான, ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில், தேசிய பசுமை படை ஆசிரியர்களுக்கான,இயற்கையோடு இணைந்த தொழில்நுட்ப வாழ்வியல்குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
அதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் தலைமை வகித்து பேசுகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இயற்கை சூழலுக்கு பாதிப்பு இல்லாத நிலையை உறுதி செய்வது அவசியம். மனிதனின் பேராசையால், இயற்கை வளங்கள் இந்த நுாற்றாண்டில் பெரும் அளவில் குறைந்துள்ளது. மனித வாழ்க்கையை நிலை நிறுத்த, இயற்கை பாதுகாப்பு மிக அவசியம், என்றார்.
புதிய தொழில்நுட்பம்
ஈகோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் பேசுகையில், புதிய தொழில்நுட்பங்கள் மாணவர்களை சென்றடையும் வகையில், இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், இன்றைய தொழில்நுட்பம் அவசியமானதாக உள்ளது, என்றார்.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல்கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ஆசிரியர்களுக்கு இது போன்ற பயிற்சி அளிப்பது,எதிர்காலத்திற்கு நீடித்த நிலைத்த மேம்பாட்டிற்கு அடித்தளமாக இருக்கும் என்றார்.
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ பேசுகையில், புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மாற்ற முடியாத சக்தியாக இருக்கும். அவற்றை சூழல் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக மாற்றுவதை புதிய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும், என்றார்.
ரோபோடிக்ஸ் முக்கியத்துவம் பெறும்
பெங்களூரு யுனிபர்ஸ்ட் ரோபோ டிரிக்ஸ் நிறுவன பயிற்சியாளர்தேஜாஸ் பேசுகையில், எதிர்காலத்தில் நாட்டின் வளம், மின்னணு கழிவுகள், உள்ளாட்சிகளின் குப்பை மேலாண்மை உட்பட, அனைத்து துறைகளிலும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும். பள்ளி மாணவர்களுக்கு, ரோபோடிரிக்ஸ், ஏ.ஐ., உட்பட புதியதொழில்நுட்பம் குறித்து கற்பிக்கும் போது, எதிர்காலத்தில், அவர்கள் அனைத்துதுறைகளிலும் மிக சிறந்த மாற்றங்களை உருவாக்கும்நிலை உருவாகும், என்றார்.
சூழலியலாளர் சுவாதி, இயற்கை விவசாயி ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ்,சூழல் பாதுகாப்பு; இயற்கை விவசாயம் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, மின்னணு கழிவுகள், மட்காத குப்பை ஆகியவற்றை கையாள்வதில், ரோபோடிக்ஸ் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பசுமை படை ஆசிரியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் செய்திருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...