தமிழகத்தில் ஜனவரி, 2 முதல் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளில், பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்திய நிலையில், பிற துறை விடுதிகளிலும், இம்முறையை அமல்படுத்த வேண்டும்.
பதிவு முறையில், தற்போதுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என, காப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைகளின் கீழ் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக, 1,350க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி மாணவருக்கு மாதம் தலா, 1,400 ரூபாய், கல்லுாரி மாணவருக்கு தலா, 1,500 ரூபாய் என, உணவுத் தொகையாக அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், விடுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை போலியாக காட்டி கூடுதல் உணவுத்தொகை பெற்று முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாணவர்களின் உண்மையான வருகை, அதற்கு ஏற்ப உணவுத்தொகை ஒதுக்கீடு செய்யும் நோக்கத்தில், அரசு விடுதிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கொண்டுவர திட்டமிட்டு, முதற்கட்டமாக ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் ஜனவரி, 2 முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, மாணவர்கள், காப்பாளர்கள், சமையலர், காவலர், விடுதி பணியாளர்கள் என அனைவருக்கும், பயோ மெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
விடுதிகள் தோறும் இரண்டு கேமராக்கள், ஒரு பயோ மெட்ரிக் வருகை பதிவு இயந்திரம், இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இம்முறையை விரைவில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், கள்ளர் சீரமைப்புத்துறை விடுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, காப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விடுதி காப்பாளர்கள் கூறியதாவது:
பயோ மெட்ரிக் வருகை பதிவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இதற்கான இயந்திரங்கள் தரமற்றதாக உள்ளன. 30 மாணவர்கள் வருகை பதிவு செய்தால், பலரின் பதிவுகள் விடுபடுகின்றன.
விடுபடுபவர்கள் வருகை பதிவு செய்வது, அருகில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. பல மாணவர்கள் இரண்டு முறையும் பதிவு செய்வதில்லை.
இதுபோல் ஏற்படும் தொழில்நுட்பக் குளறுபடிகளை உடனே சரிசெய்ய வேண்டும். காலை, மாலை என இரண்டு முறை என்றில்லாமல், ஏதாவது ஒரு வருகை பதிவை மட்டும் கணக்கிடும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குளறுபடிகளை சரிசெய்த பின் இம்முறையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...