சென்னை:
கூரையில்லாத பள்ளியில், தமிழ் மீடியத்தில் கல்வி கற்று இஸ்ரோ தலைவராக நாராயணன் உயர்ந்துள்ளார். அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத் பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் நாராயணன். இவர் ஏழை குடும்பத்தில், மறைந்த வன்னியபெருமாள், எஸ்.தங்கம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.
இவருக்கு, கோபாலகிருஷ்ணன், பத்மநாபபெருமாள், கிருஷ்ணமணி ஆகிய மூன்று சகோதரர்களும், நாகலட்சுமி மற்றும் ருக்மணி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். இவரது தந்தை விவசாயி. இவர், குழந்தைகளை கஷ்டப்பட்டு, படிப்பில் சேர்த்தார். நன்றாக படிக்குமாறு ஊக்கப்படுத்தினார். இவரும், இவரது உடன்பிறந்தவர்களும் கூரையில்லாத பள்ளியில், தமிழ் மீடியத்தில் கல்வி பயின்றனர்.
1969ம் ஆண்டு முதலாம் வகுப்பு படிக்கும் போது, அவரது ஆசிரியர்கள் ஒரு நாள் நிலவில் மனிதன் வெற்றிகரமாக இறங்கியதை கூறியதை இன்றும், நாராயணன் நினைவு கூறுகிறார். இவர் நன்றாக படிக்க கூடியவர். இவர் முதல் ரேங்குடன், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு வேலை கிடைப்பதற்கான ஆரம்ப வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, அவரது தந்தை அவரை அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பில் சேர்த்தார்.
இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவரது வீட்டிற்கு மின்சாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி அவரும் அவரது சகோதரர்களும் படித்தனர். 1984ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்துள்ளார். தற்போது திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.
இவரது படிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக, அவர் ஐ.ஐ.டி., கோரக்பூரில் முதல் ரேங்குடன் ஏ.எம்.ஐ.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.டெக் கிரையோஜெனிக் இன்ஜினியரிங், ஐ.ஐ.டி., கோரக்பூரில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பி.எச்டி., முடித்தார்.
பேராசிரியர் கலைசராஜின் இரண்டாவது மகளான கவிதாராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாராயணனின் மூத்த மகள் மிஸ் திவ்யா, BTech, PGDM பட்டப்படிப்பை முடித்து தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இளைய மகன் காலேஷ் கணினி பொறியியலில் பி.டெக் படித்து வருகிறார். அவரது இரண்டாவது சகோதரர் கோபாலகிருஷ்ணன் தற்போது குடிநீர்வடிகால் வாரியத்தில் செயல் பொறியாளர் ஆவார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் எப்போதும் அவருக்கு பெரிய பலமாக இருந்து வந்தனர்.
சி 25 என்று அழைக்கப்படும் அதிசக்தி கொண்ட கிரையோஜெனிக் இன்ஜின் திட்ட இயக்குனராக இருந்து அதனை வெற்றிகரமாக்கியவர் நாராயணன். இவரது ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவும், அற்புதமான நிர்வாக ஆற்றலுமே வெற்றிக்கு உதவியது. எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த கிரையோஜெனிக் இன்ஜின் முழுக்க நம் நாட்டில் உருவாக்கப்பட்டது.
பூமியில் இருந்து நிலவுக்கு சந்திராயன் 3 ஐ கொண்டு செல்லவும், நிலவை சுற்றவும் மென்மையாக தரையிறங்கவும் நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணம். சந்திரயான் 2 விண்கலம் மென்மையாக தரையிறங்குவதில் சில சவால்களை சந்தித்தது. அத்திட்டம் வெற்றிபெறாத நிலையில், அதற்கான காரணம் என்ன; எங்கு தவறுகள் நிகழ்ந்தன என கண்டறியும் குழுவின் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்த குழு மிகக்குறுகிய காலத்தில் பிரச்னைகளை கண்டறிந்து சந்திராயன் 3ல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் வழிகாட்டியது.
நாராயணனுக்குக் கிடைத்த விருதுகளும், வெகுமதிகளும்!
இந்திய விண்வெளித் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நாராயணனை பாராட்டி 25 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
* கிரயோஜனிக் உந்துவியல் கருவியை வடிவமைத்தமைக்காக குழும விருது (Team Award)
* இந்திய விண்வெளித்துறையில் சிறந்த பங்களிப்பிற்கான விருது.
* High Energy material Society அளித்த விருது
* Aeronautical Society of India ஏவூர்தி மற்றும் அது தொடர்பான தொழில் நுட்பத்திற்கான விருது.
* High Energy material Society அளித்த விருது.
* Aeronautical Society of India வழங்கிய தேசிய அளவிலான விருது.
* Aeronautical Society of India, சார்பில் சந்திரயான் - 3,ஆதித்யா எல் -1,டிவி டி1வெற்றிகளைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
வெற்றிக்கான ரகசியம்!
உழைத்தால் உயரலாம். எனக்கு முக்கியமான பொறுப்பை பிரதமர் வழங்கியுள்ளார்; இஸ்ரோவை நானும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முயல்வேன். இது என் தனிப்பட்ட பணி அல்ல. வளர்ச்சிக்காக குழுவாக இணைந்து உழைக்கிறோம். தமிழ் வழி, ஆங்கில வழி என்று இல்லாமல் உழைத்தாலும் யார் வேண்டுமென்றாலும் உயரலாம். இவ்வாறு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...