ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசின் தந்திர நடவடிக்கை என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார், சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக அரசின் சட்டமன்றக் கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியபின் ஆலோசனைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு எதிரானது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள் செய்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவோம் என கூறுவது அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திமுக அரசு செய்யும் நம்பிக்கை துரோகமாகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமே அரசுக்கு நிதிச் சுமை குறைவு என்பதை தொழிற்சங்கங்கள் ஆதாரபூர்வமாக நிருபித்துள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட ஒருங்கினைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுகளுக்கு பல மடங்கு கூடுதல் செலவாகும் என்பதால் தான் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு தவிர மற்ற மாநிலங்கள் அதனை அமல்படுத்துவதாக அறிவிக்கவில்லை. மேலும், ஏப்.1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பின்னர் தமிழக அரசு மே மாதத்துக்குப் பின் ஆலோசனைக் குழு அமைப்பது என்பதே காலம் கடத்தும் தந்திர நடவடிக்கை.
2016-ல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அக்குழு 3 மாதங்களில் அறிக்கை வழங்காமல், 3 ஆண்டுகள் கழித்து அறிக்கை சமர்ப்பித்தது. அதேபோல், குழு அமைத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பிக்க திமுக அரசு திட்டமிடுகிறது. எனவே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...