இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏ.ஐ., தொழில்நுட்பம், நானோ ரோபோடிக்ஸ் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என தமிழக கவர்னர் ரவி பேசினார்.
வேலுார் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், தென் மாநிலங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இருநாள், மாநாடு நேற்று துவங்கியது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த, 120 பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
அகில இந்திய பல்கலை சங்க தலைவர் விநய்குமார் பதக் தலைமை வகித்தார். செயலர் பங்கஜ் மிட்டல், வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டை துவக்கி வைத்து தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தும் முன், அவர்கள் நம் வாழ்க்கை முறை, கல்வி முறை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டனர். ஹிந்து மதமும், கல்வி முறையும், பண்டைய காலத்தில் சுய சிந்தனை செயலாற்றலுடன் இருந்தது.
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள், அடிமை கல்வி முறையான மெக்காலே கல்வி முறையை திணித்தனர். அதைத்தான் நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். அவற்றை மாற்றவும், முன்னேற்றம் அடையவும், அந்த நோக்கத்தில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது நல்லொழுக்கத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.
கல்வி, பண்டைய காலத்தில் அரசர் ஆளுமையின் கீழ் இருந்தது. ஆனால் தலையீடு இருக்காது. அதுபோல தான், தற்போது மத்திய ஆளுமையின் கீழ் கல்வி உள்ளது. மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசே கல்வியை வழி நடத்தும்.
கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக நாடுகளுக்கு பல திட்டங்களையும், கண்டுபிடிப்புகளையும் வழங்குவதில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது.
ஏ.ஐ., எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ், நானோ ரோபோடிக்ஸ் போன்றவற்றிலும் இந்தியாவின் வளர்ச்சிக்காக மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் சுதந்திரமாக செயல்படுகின்றன.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...