உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.O, பிப். 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவை மத்திய கல்வித்துறை அமைச்சகம் நடத்துகிறது. எனவே இவ்விழாவின் கருப்பொருளாக அகத்திய மாமுனிவர் இடம்பெற்றுள்ளார். இதையொட்டி, சென்னையிலுள்ள சிஐசிடி சார்பில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐசிடியின் பதிவாளரான முனைவர் ரெ.புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் பாரத மொழிகளின் குழுவின் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் காசித் தமிழ்ச் சங்கமம் 3.0-இன் மையப் பொருண்மையாக அகத்திய மாமுனிவர் உள்ளார். இவரது பங்களிப்பை எடுத்துரைக்கும் விதமாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டியை நடத்த உள்ளது.‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்டான்’ என்று கம்பரால் புகழப்பெற்றவர், அகத்திய மாமுனிவர். இவர், பதினெண் சித்தர்களில் தலைசிறந்தவர்; தமிழின்பால் மாளாக் காதல்கொண்டு தென்னகம் வந்து பொதிகையில் வாழ்ந்தவர்.
இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் அகத்தியம் என்னும் நூலை இயற்றிய தமிழின் முதல் இலக்கணி; உடற்பிணியும் உளப்பிணியும் பிறவிப்பிணியும் போக்கப் பன்னூல்களைத் தண்டமிழில் யாத்த மருத்துவர்.மருத்துவம் மட்டுமல்லாமல் அளவையியல், சோதிடம், யோகம், ஞானம், வர்மம் முதலான துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்கள் எண்ணற்றவை. சித்த மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.
இதைச் சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளானது தேசிய சித்த மருத்துவ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகைய பெருமைக்குரிய அகத்திய மாமுனிவரின் பங்களிப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே அவசியமாகிறது.இதை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்தக் கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
இதில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலானப் பள்ளி மாணவர்களுக்கு ‘அருந்தமிழ் கண்ட அகத்தியர்’ எனும் தலைப்பில் அளிக்கப்படுகிறது.இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் கல்லூரி, பல்கலைகழகங்களின் மாணவர்களுக்காக, ‘அகத்தியர் காட்டும் அறிவியல்’ எனும் தலைப்பில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
இக்கட்டுரைப் போட்டியின் விதிமுறைகள் : > பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
> பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை 5 பக்கத்துக்கு மிகாமலும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை 8 பக்கங்களுக்கு மிகாமலும் அமைய வேண்டும்.
> தமிழ் மொழியில் மட்டுமே கட்டுரை அமையப்பெற்றிருக்க வேண்டும்.
> தட்டச்சு செய்யாமல் கையெழுத்துப் படியாக அனுப்பிவைக்க வேண்டும்.
> கட்டுரையினைப் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர், நிறுவன இயக்குநர் ஒப்புதலுடன் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
> உரிய முறையில் வரப்பெறாத கட்டுரை ஏற்கப்பட மாட்டாது. ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
> முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 அளிக்கப்பட உள்ளன. கட்டுரை வந்துசேர வேண்டிய இறுதிநாள் பிப்.5,2025
> எக்காரணத்தைக் கொண்டும் போட்டிகள் தொடர்பாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நேரில் வரவோ, தொலைபேசி வழியாகத் தொடர்புகொள்ளவோ கூடாது.
> கட்டுரையினை, பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை – 600 100 என்ற முகவரிக்கு அஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்க வேண்டும். கட்டுரைக்கான தரவுகளை https://cict.in/cict2023/kts/ என்னும் வலைப்பதிவில் பார்வையிடலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் 10 நாட்கள் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தில் 4,000 பேர் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்து அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்கான பதிவை சென்னை ஐஐடி சார்பிலான kasitamil.iit.m.ac.in எனும் இணையதளத்தில் பிப். 1-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...