எதிர்காலத்தில் தேர்வானோர் பட்டியலை வெளியிடுவதற்கு முன், கீ ஆன்சரான, இறுதி செய்யப்பட்ட விடைகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட வேண்டும். இது, ஒரே கட்டமாக நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி முத்துலட்சுமி உட்பட சிலர் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
குரூப் - 4 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., ஜன., 30ல் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது; விண்ணப்பித்தோம். ஜூன் 9ல் எழுத்து தேர்வு நடந்தது. ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் முடிந்தபின்தான் இறுதி விடைகள், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. இதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும்.
தகுதியற்றவர்கள் தவறான முறையில் பணியில் நுழைய வாய்ப்புள்ளது. அறிவிப்பு சட்டவிரோதமானது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி., நடத்திய சில தேர்வுகளில் தவறுகள் நடந்துள்ளன.
குரூப் - 4 தேர்வு நியமன நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்வின் இறுதி முடிவு வெளியாவதற்கு முன், இறுதி விடைகளை வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டனர்.
பிற பணிகளுக்கு தேர்வு நடத்தும் முகமைகள் பின்பற்றுவதைப் போல, தேர்வு முடிந்த பின் இறுதி விடைகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட வேண்டும் என, தனிநீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து டி.என்.பி.எஸ்.சி., செயலர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. டி.என்.பி.எஸ்.சி., தரப்பு: ஆள்சேர்ப்பு நடைமுறை முழுதும் முடிவதற்கு முன் விடைகளை வெளியிட்டால், பல விண்ணப்பதாரர்கள் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வர்.
ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையும் பாதியில் நிற்கும். ஆள்சேர்ப்பில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேர்வு நடைமுறை முழுமையாக முடிந்ததும் விண்ணப்பதாரர்களின் விடைகள், மதிப்பெண்கள் வெளியிடப்படும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்:
குரூப் - 4க்கான தேர்வு நடைமுறையானது ஒரே கட்டத்தை மட்டுமே கொண்டது. அது முடிந்ததும் வேறு ஒரு நடைமுறையும் இல்லை. குறைந்தபட்ச, கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் பணியில் நியமிக்கப்படுவர்.
தேர்வானோர் பட்டியலை வெளியிடும் முன், இறுதி செய்யப்பட்ட விடைகளை வெளியிடுவது, தேர்வு நடைமுறையை பாதிக்காது. பல கட்ட தேர்வுகளாக இருந்தால், அடுத்தடுத்த நடவடிக்கைகள் தடைபடும் என்ற டி.என்.பி.எஸ்.சி.,யின் அச்சத்தில் சில நியாயம் இருக்கலாம்.
ஒரே கட்டமாக நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை தேர்வில், இறுதி விடைகளை வெளியிடுவது, தேர்வு நடைமுறைகளுக்கு தடையாக இருக்காது. இதில், டி.என்.பி.எஸ்.சி.,யின் அச்சம் நியாயமானது அல்ல என்பது எங்களின் உறுதியான கருத்து.
இறுதி விடைகளின் அடிப்படையில் சரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் உரிமை உண்டு. தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை தேர்வுகளில், இறுதி விடைகளில் பல தவறுகள் உள்ளதை காண்கிறோம்.
தேர்வு பணி முழுமையாக முடிவடையும் வரை, தேர்வு தொடர்பான இறுதி விடைகள் வெளியிடப்படமாட்டாது என்ற டி.என்.பி.எஸ்.சி.,யின் அறிவிப்பை ரத்து செய்கிறோம்.
எதிர்காலத்தில் தேர்வானோர் பட்டியலை வெளியிடுவதற்கு முன், இறுதி விடைகளை வெளியிட வேண்டும். இது ஒரே கட்டமாக நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பல கட்டங்களாக முதன்மை தேர்வு, நேர்காணல் என நடத்தப்படும் தேர்வுகளுக்கு இது பொருந்தாது. தற்போது தேர்வு நடைமுறைகள் முடிந்து விட்டன; நாங்கள் தலையிட விரும்பவில்லை. தகுதி அடிப்படையில் மேல்முறையீட்டு மனு ஏற்புடையதல்ல; தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...