கேரளாவில் ஐ.டி.ஐ., பயிலும் மாணவிகளுக்கு மாதத்தில் இரு தினங்கள் மாதவிடாய் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மாதவிடாய் சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் சிரமங்களில் இருந்து விடுபடுவதற்காக, மாதவிடாய் விடுமுறை, இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொண்டு வரப்பட்டது. பீகார், ஒடிசா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, கேரளாவில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அம்மாநில அரசு கட்டாயமாக்கியது. இந்த நடவடிக்கைக்கு வரவேற்புகள் குவிந்தன.
இந்த நிலையில், ஐ.டி.ஐ., பயிலும் மாணவிகளுக்கு மாதத்தில் இருநாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொது கல்வி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்; பல துறைகளில் சாதித்து வரும் பெண்களின் நலன் கருதி, ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு மாதத்தில் இரு தினங்கள் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், சனிக்கிழமை விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களை குறுகிய கால படிப்புகள் அல்லது திறன் வளர்ப்பு சார்ந்த நிகழ்வுகளில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஐ.டி.ஐ.,யின் பயிற்சி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் ஷிப்ட் காலை 7.30 மணி முதல் 3 மணி வரையிலும், 2வது ஷிப்ட் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரையிலும் நடக்கும், என தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...