அர்ப்பணிப்புடன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுங்கள், என்று முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உட்பட நாட்டின் உயரிய அரசுப் பணியிடங்களுக்கான தேர்வை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
இப்பணியிடங்களுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவது, பலரது கனவாக உள்ளது. அவர்களின் கனவை நனவாக்கும் விதத்தில், தினமலர் நாளிதழ், வாஜிராம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் நிறுவனத்துடன் இணைந்து, நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சியை நடத்துகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழக காவல்துறை முன்னாள் டி.ஜி.பி., ரவி, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், வாஜிராம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் ஆசிரியர் ஸ்ரீவட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி., ரவி பேசியதாவது:
உங்கள் அனைவரிடமும் நம்பிக்கை உள்ளது. நம் ஆழ்மனதில் என்ன எண்ணம் இருக்கிறதோ அது நிறைவேற வேண்டும். உங்கள் மனதில் நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று விதைக்கிறீர்களோ அதை அடைய வேண்டும்.
கடந்தாண்டு 14 லட்சம் பேர் விண்ணப்பித்து, 7 லட்சம் பேர் முதல்கட்ட தேர்வை எழுதினர். அவர்களில் 13,000 பேர் முதன்மை தேர்வுக்கு முன்னேறினர். 1,450 பேர் தேர்ச்சி பெற்று, இண்டர்வியூக்கு தகுதி பெற்றனர். கல்லூரிகளில் பாடங்களை பயில்வது போன்று இந்த யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராக கூடாது.
எங்களுக்கு தெரிந்த விஷயங்களை உங்களுக்கு சொல்கிறோம். அதை உள்வாங்கிக் கொண்டு நீங்கள் தேர்வில் வெல்ல வேண்டும். நீங்கள் உங்களின் தனித்தன்மையை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது. நீங்கள் எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக மாற முடியும்.
இவ்வாறு ரவி பேசினார்.
அவரைத் தொடர்ந்து, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை பேசியதாவது:
30 வயதுக்குள் 20 லட்சம் பேர் வசிக்கும் மாவட்டத்துக்குள் கலெக்டர், எஸ்.பி.,யாக நீங்கள் வரலாம். இந்த தேர்வு ஒரு கடினமாக தேர்வு. அவ்வளவு பெரிய பொறுப்பு இந்த பணியில் உள்ளதே இதற்கு காரணம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வருவது உங்களை போன்று மனிதர்களை பார்த்துத்தான். அரசியல்வாதிகள் மீது வராது.
ஜனநாயகத்தின் மீதான பாதுகாவலர்கள் நீங்கள்தான். ஒருதலைபட்சமாக நடந்து கொள்ள கூடாது. தேர்வில் வென்று எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அந்த மாநிலத்தை முன்னேற்றுவதில் பொறுப்புடன் இருக்க வேண்டும். சிவில் சர்வீசஸ் சரியாக இருக்கும் வரை, இந்திய ஜனநாயகத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.
அரசின் இலக்குகள் மாறும் போது சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் மாற்றம் கட்டாயம் இருக்கும். அதற்கு ஏற்ப உங்களை நீங்களை திறமையானவர்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
எதற்காக சிவில் சர்வீசுக்குள் வரவேண்டும் என்று நினைத்தீர்களோ அதிலேயே கடைசி வரை உறுதியுடன் இருக்க வேண்டும். எங்கே சென்றாலும் திறமையாக பணியாற்ற வேண்டும் என்று எண்ணத்துடன் இருக்க வேண்டும். உங்களை நீங்களே இந்த பணிக்காக அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். தேர்வுக்காக தயாராகும் போது உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பாஸ் ஆகுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து அதை சரி செய்ய வேண்டும்.
வளர்ந்து வரக்கூடிய நாட்டில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது. அதிவேகமாக வளர்ந்துள்ள இந்த உலகத்தில் வேகமாக வளரும் நாடான இந்தியாவில் இருக்கிறீர்கள். எனவே உங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வளர்ந்த நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள மொத்த கல்லூரிகளில் 27 சதவீதம் கோவையில் இருக்கிறது. இங்கு மட்டும் 441 கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் இருக்கும் 960 மாவட்டத்தில் எங்கேயும் எந்த ஒரு மாவட்டத்திலும் இது போன்று அதிக கல்லூரிகள் கொண்ட மாவட்டம் கிடையாது. எனவே உங்களுக்கான வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...