சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றவுடன், தலித் மாணவர்கள் வெளிநாட்டில் உயர் கல்வி படி-ப்பதற்கான செலவை, அம்பேத்கர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும் என முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவல், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பிப்ரவரியில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், டாக்டர் அம்பேத்கர் சம்மான் ஸ்காலர்ஷிப் திட்டம் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், தலித் மாணவர்கள் வெளிநாட்டில் உயர் கல்வி கற்பதற்கான செலவை அரசே ஏற்கும். லோக்சபாவில் அம்பேத்கரை பா.ஜ., அவமதித்ததற்கு பதிலடியாக இந்த திட்டத்தை ஆம் ஆத்மி ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபாவில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை கேலி செய்ததால்,கோடிக்கணக்கான மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். கல்விதான் முன்னோக்கி செல்லும் வழி என்பது அம்பேத்கர் நமக்குக் காட்டிய வழி. டில்லியைச் சேர்ந்த தலித் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலையில் சேர்க்கை பெற்றால், அவர்களின் கல்வி, பயணம் மற்றும் தங்குமிடத்திற்கான முழுச் செலவையும் டில்லி அரசே ஏற்கும். அரசு ஊழியரின் குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
ஏற்கனவே, பெண்களுக்கு மாதம் 2,100 ரூபாய் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை ஆகிய வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...