அரசு தேர்வுகளில் வினாத்தாள்களை மொழி பெயர்ப்பு செயலிகள் மூலம் மொழிபெயர்த்ததால் அதிகமான பிழைகள் ஏற்படுவதாக மாணவர்கள் குமுறுகின்றனர்.
கர்நாடகாவில் கன்னடம் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். 5ம் வகுப்பு வரை பள்ளிகளில் கட்டாயம் கன்னடம் கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வுகள் ஆணையம், கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆகியவை, பெரும்பாலான அரசு தேர்வுகளின் வினாத்தாள்களை ஆங்கிலம், ஹிந்தியில் தான் தயாரிக்கின்றன.
பின்னர், மொழிபெயர்ப்பு செயலிகள் வாயிலாக வினாத்தாள்கள், கன்னடத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன. இதனால் வினாத்தாள்களில் பல பிழைகள் காணப்படுகின்றன. வினாவை சரியாக புரிந்து கொள்ள முடியாமலும், சரியான பதில் எழுத முடியாமலும் மாணவர்கள் திணறுகின்றனர்; பலர் தேர்வுகளில் தோல்வி அடையும் நிலையும் உருவாகிறது.
மாநிலத்தில் தகுதியான மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கும்போது, யாரும் இல்லை என கே.பி.எஸ்.சி., கூறுவது ஏற்கத்தக்கதல்ல என, கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் புருஷோத்தம பிலிமலே கூறியுள்ளார்.
வினாத்தாள்களில் ஏற்படும் பிழைகளை தவிர்ப்பதற்கு, மொழிபெயர்ப்பாளர் குழு அமைக்க வேண்டும் என, மாநில அரசை, போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வங்கிப் பணியாளர் தேர்வாணையம், 2014 - 2018 ஆண்டுகளில் 18,000 பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தியது. இதில், கர்நாடகாவிலிருந்து 1,060 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தென் மேற்கு ரயில்வே சார்பில் 2017- 2018 ஆண்டுகளில் 2,200 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், வெறும் 22 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
யு.பி.எஸ்.சி., தேர்வுகளில், வல்லுனர்களால் வினாத்தாள்கள் மொழி பெயர்ப்பு செய்யப்படுகின்றன. இதனால் தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. இதுபோல மாநில அளவிலும், மொழி பெயர்ப்பு வல்லுனர்கள் குழுவை அமைக்க வேண்டும் என போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் விருப்பப்படுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...