இன்றைய தலைமுறையினரிடம் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி நக்கீரன் பேசினார்.
திருவொற்றியூர் பாரதி பாசறை'யின் 40ம் ஆண்டு நேரு தேசிய கலைவிழா போட்டிகள், தேரடி, தனியார் திருமண மண்டபத்தில், நேற்று மாலை நடந்தது.
போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நக்கீரன், லண்டன் - இளம் விஞ்ஞானி ஜேனு குமார் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்று, பரிசு, சான்றிதழ், கேடயம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
விழாவில், அதிக புள்ளிகள் பெற்ற ரேவூர் பத்மநாபா பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
நிகழ்ச்சியில், நீதிபதி நக்கீரன் பேசியதாவது:
ஆத்திசூடியில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளும் உள்ளன. பெண்ணாக இருந்தால் பயம் கொள்ளக்கூடாது. அச்சம் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்பதில் துவங்கி, குடும்பம், சமூகத்தில் என, இன்றைய தலைமுறையினரிடம் பொறுப்புணர்வு வர வேண்டும்.
நம் நாட்டை திறம்பட மேம்படுத்தும் வகையிலான பொருளாதார சிந்தனை, மாணவர்களிடம் வர வேண்டும். தமிழ்தாய், தேசிய கீதம் உள்ளிட்டவற்றை வாயுற பாட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இளம் விஞ்ஞானி ஜேனுகுமார் சுப்பிரமணியம் பேசியதாவது:
நவீன தொழில்நுட்பங்களில் இருந்து, மாணவர்கள் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் மொபைல் போனை படிப்பதற்காக தருகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாணவர்கள் புத்தகங்கள் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவும் படிக்க முடியும். மொபைல் போனில் இருந்து பணம் அனுப்ப வேண்டி குறுஞ்செய்தி வந்தால், அதை போனில் அழைத்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மொபைல் போனில், லிங்க்கை தொடுவதன் மூலம் பணம் இழப்பு என்பதை ஒருபுறம்; மறுபுறம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பாரதி பாசறை செயலர் மா.கி.ரமணன், நிர்வாகி நீலகண்டன், தொழிலதிபர் துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...