கலைகள் மற்றும் கலாசார பிரிவுகளில், தேசிய அளவில் சாதித்த மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யில் சிறப்பு பிரிவு சேர்க்கை துவக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:
சென்னை ஐ.ஐ.டி.,யில், இந்தாண்டு முதல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கை நடந்துள்ளது.
அனுமதி
இதன் வாயிலாக, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனையருக்கு, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பளிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
இதற்காக, ஏற்கனவே உள்ள இடங்களுடன் கூடுதல் இடங்கள் ஒதுக்க, மத்திய உயர் கல்வி துறையின் அனுமதி பெற்றுள்ளோம்.
அதாவது, ஜெ.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், ஏதாவது ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கலைத்துறையில் சாதித்த மாணவர்களுக்கு, இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் அனுமதி கிடைக்கும்.
மத்திய அரசால் வழங்கப்படும் பிரதர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது, தேசிய பால்ஸ்ரீ விருது, தேசிய இளைஞர் விருது, சங்கீத் நாடக அகாடமி வழங்கும் உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் விருது பெற்ற மாணவர்களுக்கு, 100 மதிப்பெண் வழங்கப்படும்.
ஆறு ஆண்டுகள்
மேலும், அகில இந்திய வானொலி, துார்தர்ஷன், பிரசார்பாரதி ஆகியவை நடத்திய போட்டிகளில், கடந்த ஆறு ஆண்டுகளில் பங்கேற்று, 'பி கிரேடு' பெற்ற மாணவர்கள்; மத்திய அரசால் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட இந்திய விழாக்களில், கடந்த ஆறு ஆண்டுகளில் கலைஞர்களாக பங்கேற்ற மாணவர்கள்; தேசிய இளைஞர் போட்டிகளில், பிரதமரின் முன் கலை நிகழ்த்திய மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்களுக்கு, 75 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் கலாசார திறமையாளர் தேடல் பிரிவில் ஊக்கத்தொகை விருது பெறும் மாணவர்களும் பங்கேற்கலாம். அவர்களுக்கு, 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவர்களில் தரவரிசையில் முன்னணியில் இருப்போருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு துறையிலும் பொதுப்பிரிவில் ஒருவர், பெண்கள் பிரிவில் ஒருவர் என, இருவர் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பயாலாஜிக்கல் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் பிசிக்ஸ் ஆகிய துறைகளுக்கு மட்டும், நான்கு பேர் சேர்க்கப்படுவர்.
அதாவது, சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, 14 துறைகளில், 11 துறைகளில் இரண்டு இடங்களும், மூன்று துறைகளில் நான்கு இடங்களும் என, 36 இடங்கள் ஒதுக்கப்படும், இதற்கான இணையதள விண்ணப்ப பதிவுகள், அடுத்தாண்டு ஜூன் 2ல் துவங்கி, 8ல் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...