'ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் கொண்டு வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்' என சட்டசபையில் விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தாக்கல் செய்தார். விவாதத்தின் போது அ.தி.முக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது:
சுரங்கம் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்தில் அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம். பிரதமருக்கு முதல்வர், அமைச்சர் எழுதிய கடிதத்தின் முழு விபரம் வெளியிடப் படவில்லை. தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை தி.மு.க., உறுப்பினர்கள் தடுப்பதில்லை. பார்லிமென்டில் தி.மு.க., எம்பிக்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
என்ன செய்தீர்கள்?
மாநில உரிமைகள் பறிபோகும் போது, தி.மு.க., எம்.பி.,க்கள் ஏன் அழுத்தம் தரவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் 10 மாத காலமாக தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீங்கள் தனித்தீர்மானம் கொண்டுவருவீர்கள், அதற்கு நாங்கள் விளக்கம் கேட்க கூடாதா? அதுபற்றி நாங்கள் பேசக்கூடாதா? தலையாட்டி, தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா? 10 மாதமாக என்ன செய்தீர்கள்? அப்போது ஏன் எதிர்க்கவில்லை?
முழு விவரங்களை தராமல் தீர்மானம் போட்டல் நாங்கள் ஆமாம் போட வேண்டுமா? முதல்வர் எழுதிய கடிதத்தில் என்ன அம்சம் இருந்தது என தெரியப்படுத்தவில்லை. சட்டம் நிறைவேறிய பின் தீர்மானம் கொண்டு வந்தது எதற்காக? மனித உரிமையை காக்க பார்லிமென்டில் உரிய அழுத்தம் தராமல் என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.
தவறான கருத்து
இதற்கு துரைமுருகன் அளித்த பதில்: எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப தவறான கருத்தை பதிவு செய்கிறார். மீண்டும் மீண்டும் தவறான கருத்தை பதிவிடக் கூடாது. ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என சட்டம் போடப்பட்டு உள்ளது. தமிழக அரசு என்ன கைகட்டி வேலை செய்யும் வேலைக்காரனா? டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு பதிவு செய்தோம். இவ்வாறு துரை முருகன் பதில் அளித்தார்.
முதல்வர் பதில்
இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: தி.மு.க., எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கடுமையாக எதிர்த்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பார்லிமென்டில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர விருப்பதாக மக்களிடம் தெரியப்படுத்தினோம். மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சுரங்கத்திற்கான ஏலம் விட்டாலும் மாநில அரசு அனுமதி கொடுக்காது. திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒரு போதும் அனுதிக்கமாட்டோம். தமிழக அரசு அலட்சியமாக இருந்ததாக எதிர்க்கட்சி நினைக்கிறது. ஆனால் அப்படியில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன்.
ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் அமையும் சூழல் வந்தால், நான் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். பின்னர் சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...