லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் வருவாய்த் துறையினா் விசாரணை
நாட்டறம்பள்ளி அருகே லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் சென்றாயன் வட்டத்தைச் சோ்ந்தவா் ரஜினி (32). இவா், வீடு மற்றும் நிலத்துக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என கடந்த திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்த முகாமில் கோரிக்கை மனு அளித்தாா்.
இதையடுத்து சொரக்காயல்நத்தம் கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம், ரஜினியிடம் விசாரணை மேற்கொண்டாா். அரசு புறம்போக்கு இடத்தில் பாதை ஏற்படுத்தித் தருவதாக கூறிய மாணிக்கம், 2 மாதங்களுக்கு முன்பு ஆசிரியா் ஒருவரின் முன்னிலையில் ரஜினியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம் பாதை ஏற்படுத்தித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 8 -ஆம் தேதி மாணிக்கம், சொரக்காயல்நத்தம் கிராமத்தில் இருந்து பெருமாபட்டு கிராமத்துக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டாா்.
இதையறிந்த ரஜினி 11-ஆம் தேதி நாட்டறம்பள்ளியில் உள்ள ஆசிரியா் வீட்டுக்கு கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கத்தை அழைத்துச் சென்றுள்ளாா்.
அப்போது, லஞ்சமாக பெற்ற பணத்தைத் திருப்பி தருமாறும், உடனடியாக தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகாா் செய்வதாக மிரட்டியுள்ளாா்.
இதனால் பயந்துபோன கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...