மருத்துவ மேல்படிப்புக்கான தேர்வை, டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்தும்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புகளான எம்.டி., - எம்.எஸ்.,க்கு நாளை தேர்வு நடப்பதாக, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அறிவித்திருந்தது. இந்த தேர்வை, டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்தக்கோரி, உயர் நீதிமன்றத்தில், 85 மாணவர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுவில், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆய்வு கட்டுரையை, நவம்பர், 29க்குள் சமர்பிக்க வேண்டும். நவம்பர், 12ம் தேதி தான் இணைப்பு வழங்கப்பட்டது.
ஆன்லைனில் அதற்குள் சமர்பிக்க இயலாது. ஆய்வு கட்டுரையை சமர்பிப்பதற்கும், தேர்வுக்கும் இடையே, 10 நாள் இடைவெளி தான் உள்ளது. இந்த இடைவெளியில் தேர்வுக்கு தயாராவது மிகவும் கடினம் என்று கூறப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ரவி அனந்தபத்மநாபன் ஆஜராகி வாதாடினார். எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ஆறுமுகம் ஆஜரானார்.
மனுவை விசாரித்த, நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு:
இரண்டு, மூன்று வாரங்கள் தேர்வை தள்ளி வைப்பதால், பல்கலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, 9ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
தேசிய மருத்துவ கமிஷன் நிர்ணயித்த காலவரம்பை பின்பற்றி, டிசம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில், தேர்வு நடத்துவதற்கான தேதியை நிர்ணயிக்க, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...