மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியோ அல்லது கூடுதல் காலங்கள் எடுத்து கொண்டு, படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யு.சி.ஜி., தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியக் குழு கூட்டம் நவம்பர் 13ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில், பட்டப்படிப்பு முடிக்கும் காலம் குறித்து முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யு.சி.ஜி., தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:
மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களின் அடிப்படையில் தங்கள் படிப்பு காலத்தை குறைக்க அல்லது நீட்டிக்க முடிவு செய்யலாம். மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யு.ஜி.சி., கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
கூடுதல் அவகாசம்!
மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.
உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கு குழுக்களை அமைக்கும். மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன்சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...