2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கிட்டத்தட்ட எட்டு லட்சம் மாணவர்கள் 2019 ஆம் ஆண்டில் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) படிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கல்வி வாரியத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடநெறி குறித்து மக்களவையில் குஜராத் எம்.பி. ராஜேஷ்பாய் சுடாசமா கேட்ட கேள்விக்கு, 2024-25 அமர்வில், கிட்டத்தட்ட 4,538 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7,90,999 மாணவர்கள் இடைநிலை மட்டத்தில் ஏ.ஐ (AI) படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பகிர்ந்து கொண்டார்.
மேலும், ஏறக்குறைய 944 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 50,343 மாணவர்கள் மூத்த இடைநிலை மட்டத்தில் ஏ.ஐ படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
லோக்சபாவில் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மேலும் கூறியதாவது, வாரியம் 2019 ஆம் ஆண்டில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ‘செயற்கை நுண்ணறிவை’ அறிமுகப்படுத்தியது, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தயார் படுத்தும் வகையில் இந்த பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 8 ஆம் வகுப்பில் 15 மணி நேர மாட்யூலாகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறன் பாடமாகவும் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில், சி.பி.எஸ்.இ உடன் இணைக்கப்பட்ட 30,373 பள்ளிகளில், 29,719 பள்ளிகள் சி.பி.எஸ்.இ இணைப்பு துணைச் சட்டங்களின்படி தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...