பெஞ்சல் புயல் காரண மாக, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார், தர்மபுரி, கிருஷ்ண கிரி மாவட்டங்களில் கனமழை பெய்து, பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தனர். அதேநேரத்தில், வெள்ளத்தில் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம் அண்ணா கிராமம், கடலுார், பண்ருட்டி ஒன்றியங்களில், புத்தகங்களை இழந்த மாணவ - மாணவியர் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 352 ஆறாம் வகுப்பு; 350 ஏழாம் வகுப்பு; 449 எட்டாம் வகுப்பு; 609 ஒன்பதாம் வகுப்பு; 670 பத்தாம் வகுப்பு; 482 பிளஸ் 1; 535 பிளஸ் 2 புத்தகங்கள் தேவை.
ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, 182 ஆறாம் வகுப்பு; 164 ஏழாம் வகுப்பு; 270 எட்டாம் வகுப்பு; 340 ஒன்பதாம் வகுப்பு; 372 பத்தாம் வகுப்பு; 283 பிளஸ் 1; 254 பிளஸ் 2 புத்தகங்கள் என மொத்தம், 5,312 புத்தகங்கள் தேவை என, கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் பணியை பள்ளிக்கல்வி துறை துவக்கி உள்ளது. இதேபோல, இம்மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அங்கு, 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் புத்தகங்களை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த முழு தகவல், இன்று பள்ளி வரும் மாணவர்கள் வழியாக தெரிய வரும். அவர்களுக்கும் புத்தகங்கள் வழங்க, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...