2024-25 நிதியாண்டு முதல் IFHRMSல் நேரடியாக IT கணக்கிடப்பட்டு மாதாந்திர தவணைப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. எந்த வரி விதிப்பு முறையில் வரி கணக்கிடப்பட வேண்டும், வரிக் கழிவிற்கான அலுவலகம் சாராத சேமிப்புகள் / முதலீடுகள் எவையெவை என்பதையெல்லாம் ஊழியர்களே உள்ளீடும் செய்துள்ள நிலையில் தற்போதைய சிக்கலுக்கான காரணமென்ன & தீர்வு என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
-------------------------------------
*IFHRMS எதனடிப்படையில் வருமானவரி கணக்கிட்டு பிடித்தம் செய்கிறது?*
-------------------------------------
ஒருவரது மார்ச் மாத ஊதியத்தின் அடிப்படையில் 12 மாதங்களுக்கான வருமானம் & பிடித்தங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு அதனடிப்படையில் அவர் விருப்பம் தெரிவித்த வரிக் கணக்கீட்டு (Old / New Regime) முறையில் வருமான வரி கணக்கிடப்பட்டு, அதை அந்நிதியாண்டில் ஊதியம் பெறவுள்ள மாதங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம தவணைகளாக்கி பிடித்தம் செய்கிறது.
ஒருவருக்கு ஜுலையில் ஊதிய உயர்வு எனில், ஜுன் வரை பழைய ஊதியத்தையும் ஜூலை - பிப்ரவரி வரை புதிய ஊதியத்தையும் வைத்து வரி கணக்கிடப்படும்.
ஒருவேளை இவருக்கு ஜுன் வரை வரி பிடிக்கப்படாத சூழலில், ஜூலை மாத ஊதிய உயர்வால் வரி வருகிறது எனில், வரும் வரியை எஞ்சிய ஜூலை - பிப்ரவரி வரை 8 சம தவணைகளாக்கிப் பிடித்தம் செய்யப்படுகிறது.
இன்றைய நிலையில் ஜனவரி ஊதிய உயர்வு & பொங்கல் மிகை ஊதியம் தவிர்த்து, அகவிலைப்படி மாற்றம் உள்ளிட்ட அனைத்து ஊதிய மாற்றங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு வரிப் பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது. எப்போதெல்லாம் ஊதியத்தில் மாற்றம் ஏற்படுகிறதோ அம்மாதத்திய வரிப் பிடித்தத்திலும் மாற்றம் இருக்கும்.
-------------------------------------
*IFHRMSன் இந்நடைமுறை ஏற்புடையதா?*
-------------------------------------
வருமான வரிச் சட்டப்படி ஊதியம் வழங்கும் அலுவலரின் (DDOவின்) மிக முக்கியமான பணி தனது ஊழியரது வருமான வரியைத் துல்லியமாகக் கணக்கிட்டு மாதம்தோறும் பிடித்தம் செய்து காலாண்டிற்கு ஒருமுறை அதற்குரிய கணக்கினை I.Tயிடம் சமர்ப்பித்து, பிடித்தம் செய்யப்பட்ட வரியை தனது TANல் இருந்து ஊழியரது PAN வழியே I.Tயில் வரவாக்கி, வரி வந்தாலும் வராவிட்டாலும் ஆண்டின் இறுதியில் அவ்வூழியருக்கு Form16 வழங்குவதாகும். மேலும், எக்காரணம் கொண்டும் DDO TAN மூலமாக இல்லாது ஊழியரது PAN வழியே பிப்ரவரிக்குள் நேரடியாக Advance Tax செலுத்தக்கூடாது. மேற்கூறியவற்றில் தவறோ தாமதமோ நேர்ந்தால் DDOவிற்குத் தண்டனை / தண்டத்தொகை விதிக்கவும் வருமானவரிச் சட்டத்தில் இடமுண்டு.
அரசு நிருவாகத்தைப் பொறுத்தவரை இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு கருவூலத்துறையைச் சார்ந்தது. தனியார் பெரு நிறுவனங்களும், மத்திய அரசு & பொதுத்துறை நிறுவனங்களும் இதைச் சரியாக செய்துவரும் சூழலில்தான் இதற்குள்ளாக IFHRMS மூலம் தமிழ்நாடு கருவூலத்துறையும் தற்போது கால்பதித்துள்ளது.
தொடக்கத்தில் இது ஏதோ வழிப்பறி போலத் தோன்றினாலும், முறையான கணக்கீடுகளின் அடிப்படையில் சட்டப்படி தான் இந்நடைமுறை செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்நடைமுறை 100% முழுமையடையும் சூழலில், Form16 உட்பட I.T தொடர்பாகக் கூடுதலாக யாருக்கும் எந்தக் கட்டணமும் கப்பம் கட்ட வேண்டிய தேவை இருக்காது.
-------------------------------------
*IFHRMSஆல் நேர்ந்துள்ள சிக்கல் என்ன?*
-------------------------------------
இந்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் 23.07.2024 தேதியிட்ட நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், New Regime முறையில் Tax Slab மாற்றப்பட்டதோடே Standard Deductionம் 50,000ல் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுவிட்டது. இந்த உயர்வானது 2025-26 Assessment Yearக்கு (அதாவது நடப்பு 2024-25 நிதியாண்டிற்கே) பொருந்தக்கூடியதாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
IFHRMSல் அக்டோபர் 2024 வரை Tax Slab மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், Standard Deductionல் பழைய ரூ.50,000 மட்டுமே கழிக்கப்பட்டுள்ளது.
இதனால், NEW REGIMEல் உள்ள அநேகருக்குக் கூடுதலாக வருமான வரி கணக்கிடப்பட்டு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் மாதத்திலாவது இத்தவறு சரி செய்யப்பட்டால் மேற்கொண்டு கூடுதல் பிடித்தமின்றி வரும் மாதங்களில் எஞ்சிய சரியான வரியை மட்டும் IFHRMSல் தானாகவே ஈடு செய்துகொள்ளும் வாய்ப்புண்டு.
மேலும், ரூ.75,000 வரை Standard Deduction என்பதால் மொத்த வருமானம் ரூ.7,75,000/- வரை உள்ளோருக்கு வருமானவரியே வராது. ஆனால், பழைய ரூ.50,000 Standard Deductionஐ வைத்தே IFHRMSல் வரி கணக்கிடப்பட்டுள்ளதால், இந்த விளிம்பு நிலையில் உள்ள அநேகருக்கு தேவையின்றி ஜூலை2024 முதல் வரிப்பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதிலும் அக்டோபர் 2024ல் 53% DA கூட அநேகருக்கு வரியும் எக்குத்தப்பாக எகிறியுள்ளது. வரும் மாதங்களில் இத்தவறு திருத்தப்பட்டாலும், பழைய கணக்கீட்டால் வருமான வரியே வராதவர்களிடம் தவறாகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அவர்கள் திரும்பப்பெற அடுத்த அக்டோபர் (ITR முடிக்கும்) வரை காத்திருந்தாக வேண்டும்.
-------------------------------------
*சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வு என்ன?*
-------------------------------------
IFHRMSன் வரிப்பிடித்த நடைமுறையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டதோடே சங்கங்களோ / தனி நபர்களோ இதில் போதிய கவனமோ, அக்கறையோ, கணக்கீட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வோ இல்லாமல் இருந்ததும் இச்சிக்கலுக்கு மேலுமொரு காரணமாகும். இதனால், ரூ.300 முதல் ரூ.10,000 வரை தேவையேயின்றி வரி செலுத்தி வந்துள்ளனர்.
சங்கங்கள் இப்போதும், 'இதுனாலதேன் எதிர்க்கிறோம்!' என்றுகூறி போகாத ஊருக்கு வழி தேடுவதை நிறுத்திவிட்டு, சட்டம் - காலம் - களத் தேவையை உணர்ந்து. . . . IFHRMS தனது வரிப்பிடித்தக் கணக்கீட்டை 2024 Budget அறிவிப்பிற்கேற்ப Update செய்து கொள்ள வேண்டி, இம்மாதம் 10ஆம் தேதிக்குள் (Centralized Payroll Run செய்வதற்குள்) மாநிலக் கருவூலம் & நிதித்துறையிடம் வலியுறுத்தியாக வேண்டும். இல்லையேல் நவம்பர் மாதத்திலும் தேவையின்றி வரிப்பிடித்தம் செய்யப்படுவது தொடரும்.
மேலும், OLD REGIME தேர்வு செய்துள்ளோர் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / முதலீடுகள் தொடர்பான அசல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலையும் நிதித்துறையிடம் தெரியப்படுத்தி போதிய கால அவகாசத்தைச் சங்கங்கள் பெற்றுத்தர வேண்டும்.
-------------------------------------
*உடனடித் தற்காலிகத் தீர்வு என்ன?*
-------------------------------------
ஒருவேளை சங்கங்கள் இச்சிக்கலைக் கவனத்தில் கொண்டு செயல்பட தாமதம் ஏற்படும் சூழலில் ஊதியப் பட்டி அலுவலகத்தில் தயார் செய்யும் முன்பே, ஊழியர்கள் தமது வருமானவரிப் படிவத்தைத் தாங்களே தயார் செய்துபார்த்து அதனடிப்படையில், நவம்பரில் / வரும் மாதங்களில் கூடுதலாக / தேவையின்றி வரிப்பிடித்தம் செய்ய வேண்டாமென தங்களது ஊதியம் பெற்று வழங்கும் அலுலரிடம் கடிதம் அளித்து பிடித்தத் தொகையை / பிடித்தம் நிறுத்துவதை உறுதி செய்துகொள்ளவும்.
*முக்கியக் குறிப்பு :*
இதில் நான் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நம்பி பதற்றம் கொள்ளாமல், New Regime தேர்வு செய்துள்ளோர் முதலில் தங்களுக்கான சரியான வருமானவரியைக் கணக்கிட்டுப் பார்த்துவிட்டு அதனடிப்படையில் தொடர் நடவடிக்கையை உறுதி செய்துகொள்ளவும்.
Old Regime தேர்வு செய்துள்ளோருக்கு இச்சிக்கல் எழாது என்றாலும், வருமானவரியைத் தாங்களும் கணக்கிட்டு கழிவுகளுக்கான சேமிப்புகள் / முதலீடுகள் எவ்வளவு தேவை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...