தேசிய கல்விக் கொள்கை - 2020 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்கலைக்கழக மானியக் குழு, உயர்கல்வியில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. திறமையான மாணவர்கள், அவர்களது பாரம்பரிய 4 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்பை மூன்றரை ஆண்டுகளில் நிறைவு செய்யவும், 3 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்பை இரண்டரை ஆண்டுகளில் நிறைவு செய்யவும் வழிவகை செய்யும் திட்டம், குறிப்பிடத்தக்க சமீபத்திய மாற்றம். அதேபோல், படிப்பை நிறைவு செய்ய அதிக காலம் தேவைப்படும் மாணவர்களுக்கு ஏதுவாக, 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை 4 ஆண்டுகள் படிக்கவும் வழிவகை செய்கிறது.
திறனுக்கு அங்கீகாரம்
உயர்கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரிய சீர்திருத்தம் யாதெனில், 'நேஷனல் கிரெடிட் பிரேம்வொர்க்'. பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மற்றும் தொழில்கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இத்திட்டத்தின்படி, முறையான கல்வியை பெறாத அதேநேரம், அபரிமிதமான திறன்களையும், அனுபவத்தையும் பெற்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அவர்களது துறை சார்ந்த திறன் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப 'கிரெடிட்' வழங்கப்படுவதால், முறையான கல்வியை பெறாவிட்டாலும் உயர்கல்வியை தொடர அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தாய்மொழியே பயிற்றுமொழி
தமிழ் போன்ற பழமையான மொழிகள் மற்றும் வளமான கலாச்சாரத்தை பெற்ற நம்நாட்டில், அவரவர் தாய்மொழியில் உயர்கல்வியை கற்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் 42 ஆயிரம் பாடப்புத்தகங்கள் இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஆங்கிலத்தை ஒரு சர்வதேச தொடர்பியல் மொழியாக கற்றுக்கொள்வதன் வாயிலாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாய்ப்புகளை எளிதாக்கிக்கொள்ளலாம்.
இந்திய மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி வழங்குவதற்கு அடுத்ததாக, திறன் வளர்ப்பிற்கு பிரதான முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., போன்ற படிப்புகளுடன் திறன் வளர்ப்பையும் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களது முதன்மை கல்வி எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் இந்த திறன் மேம்பாட்டால், அவர்களால் சுயவேலை வாய்ப்புகளை வசமாக்கிக்கொள்ள முடியும்.
நம்பிக்கை
தேசிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்களை கல்லூரி முதல்வர்களும், பேராசிரியர்களும் முதலில் புரிந்துகொள்ளும் வகையில் நாடுமுழுதிலும் ஏராளமான கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் வாயிலாக, கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான சவால்கள் கண்டறியப்பட்டு அதற்கு தீர்வுகளும் காணப்படுகின்றன.
தமிழகம் போன்ற சில மாநிலங்கள் எந்த ஒரு பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். கல்விக் கொள்கையை அமல்படுத்துவதே இங்கே பிரதானம். இன்னும் எத்தனை சவால்கள் வந்தாலும், அதற்கு உரிய தீர்வு காணப்பட்டு விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பதோடு மட்டுமல்லாமல் நமது கல்வி நிறுவனங்களை, சர்வதேச அளவில் முன்னணி இடங்களில் அங்கம் வகிக்கச் செய்வதும் யு.ஜி.சி.,யின் முக்கிய குறிக்கோள்!
-பேராசிரியர் ஜெகதீஷ் குமார், தலைவர், பல்கலைக்கழக மானியக் குழு, புதுடில்லி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...