வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெறும் இந்திய மாணவர்கள், சொந்த நாட்டில் பயிற்சி பெற எழுத வேண்டிய முக்கியமான ஸ்கீரினிங் தேர்வு, எப்.எம்.ஜி.இ., எனும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு.
இந்தியாவில் பயிற்சி செய்வதற்குத் தேவையான அடிப்படை மருத்துவ அறிவு மற்றும் திறன்களை மதிப்பிடும் இத்தேர்வு, என்.பி.இ.எம்.எஸ், எனும் தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மாநில மருத்துவக் கவுன்சில்களில் பதிவு செய்து, மருத்துவப் பயிற்சி பெறுவதற்கான தகுதியை இத்தேர்வு வழங்குகிறது.
கல்வித் தகுதி:
இந்திய குடிமகனாகவோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமகனாகவோ இருத்தல் வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வெளிநாட்டு மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். மே 2018க்கு பிறகு வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெறுபவர்கள் 'நீட்' தேர்வை எழுதியிருப்பது கட்டாயம்.
தேர்வு முறை:
கணினி அடிப்படையில் நடத்தப்படும் இத்தேர்வில், மொத்தம் 300 கொள்குறிவகை கேள்விகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண் இல்லை. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. டிசம்பர் 2024 தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நேரம்:
காலை மற்றும் பிற்பகல் என மொத்தம் 5 மணி நேர கால அளவில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு மையங்கள்:
சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, உட்பட நாடு முழுவதிலும் 60 நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 18
தேர்வு நடைபெறும் நாள்:
ஜனவரி 8, 2025
விபரங்களுக்கு:
https://natboard.edu.in/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...