சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது. இது, கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கு விரைவில் விசா வழங்கும் நடைமுறையை கனடா கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் எளிதாக விசா பெற்று கனடாவில் படிக்கச் சென்றனர். கடந்த ஆண்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கனடா விசா வழங்கியிருந்தது. இந்திய மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் விசா கிடைத்தது.படிப்பதற்காகவும், வேலைக்காவும் வெளிநாட்டினர் அதிகம் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகிவிட்டது. இதர வசதிகள் செய்து தருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. மாணவர்களின் வாழ்க்கை துணைகளுக்கு வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மாணவர்களுக்கு விரைவு விசா நடைமுறையை கனடா நேற்று நிறுத்தியது.
அடுத்த ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு உட்பட அனைத்து படிப்புகளிலும் சேர வெளிநாட்டு மாணவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி தகுதி தேர்வு நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் வேலை பார்ப்பதற்கு வழங்கப்படும் அனுமதியும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் கனடாவில் படிக்க விசா பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும், மேலும் மொழித் தேர்வு, முதலீட்டு தொகை உட்பட தங்களின் தகுதிகளையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான விரைவு விசாவை கனடா நிறுத்தியுள்ளது, அங்கு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
கனடாவில் நிலைமை சரியில்லாததால், அங்கு படிக்க இந்திய மாணவர்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசும் சமீபத்தில் அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...