பள்ளிக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி முறைகேடு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க அனைத்து அலுவலர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 10,000 ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருதில்லை என்றும், அவர்கள் குறைந்த ஊதியத்தில் வேறு நபர்களை அமர்த்தி பாடங்களை எடுக்கச் சொல்லியிருப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுபற்றி விசாரித்தபோது, தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பாலாஜி பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பாலாஜி, 17வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த தகவலை துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காத தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசு பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி, தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க கல்வி இயக்குநர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...