கோவை மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து தமிழ் மொழி பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்காக அவர்களது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அசாம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள்.
அவர்கள் பணிபுரியும் இடங்களில், மொழி காரணமாக, அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, தமிழில் பேச்சு பயிற்சியளிக்க கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஏற்பாடு செய்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை தொழிலாளர் நலத்துறையினர் துவங்கி உள்ளனர்.
இதையடுத்து, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை அன்னுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு, புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த விவரங்கள் முழுவதுமாக மின்னஞ்சல் வாயிலாக தமிழ் வளர்ச்சித் துறைக்கு அளிக்கப்பட உள்ளன. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆன்லைன் வாயிலாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அனைத்து நிறுவனங்களில் பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, தமிழ் மொழி பயிற்சி இணைய வழியாக அளிக்க, அனைத்து நிறுவனங்களும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை ismcoimbatore@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதில் புலம்பெயர் தொழிலாளரின் பெயர், தொலைபேசி எண், பாலினம், நிறுவனத்தின் பெயர், நிறுவனம் எங்கு அமைந்துள்ளது, சொந்த ஊர், தாய் மொழி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும். இந்த விவரங்களை சேகரிக்க, பல்வேறு தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரைவில் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் வாயிலாக தொழிலாளர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி அளிப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...