புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவோரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது, என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், புவிசார் குறியீடுகள் மற்றும் புதுமையான தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக, இரண்டு நாள் ஆய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், சிறந்த படைப்புகளை உருவாக்கிய பேராசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
பின், வின்சென்ட் அளித்த பேட்டி:
கடந்த 2008ம் ஆண்டு முதல், 40 பிரிவுகளின் கீழ் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால், காப்புரிமை பெறுவோரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதர மாநிலங்களை ஒப்பிடும்போது, 7,500 உருவாக்கங்களுக்கு காப்புரிமை பதிவு செய்து, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், மகாராஷ்டிரா உள்ளது.
காப்புரிமை திட்டம் வாயிலாக, தமிழகத்தில் சமூக பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது. காப்புரிமை பெற்ற பொருட்களை சந்தைப்படுத்த, உருவாக்கியோரை தொழில் முனைவோராக மாற்ற, தொழில் துறை ஆலோசனை வழங்குகிறது.
ஆண்டுதோறும், 1,000 மாணவர்களை தேர்வு செய்து, உருவாக்கங்களுக்காக தலா, 10,000 ரூபாய் வழங்குகிறோம். இந்த ஆண்டு, 16,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதில் புதிய உருவாக்கங்களுக்கு காப்புரிமை பெறும் வழிமுறைகளை சொல்லி கொடுக்கிறோம். காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள், மக்களை சென்றடையும் வகையில் வணிகப்படுத்துவது தீவிரப்படுத்தப்படும்.
காப்புரிமை பெறுவதற்கான செலவுகளை, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகம் வாயிலாக பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். முதலீட்டாளர்களை கண்டுபிடித்து, அவர்களை காப்புரிமை பெற்றவர்களுடன் இணைத்து சந்தைப்படுத்துவது மேம்படுத்தப்படும்.
பாரம்பரிய பொருட்களுக்கு, புவிசார் குறியீடுகள் பெறுவது வேகப்படுத்தப்படும். புவிசார் குறியீடுகள் பெற்றவர்களை, உலக சந்தைக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...