தமிழக அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியில் சேரவும், அதேபோல், தலைமைச் செயலக நிருபர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதவிக்கும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். இருப்பினும், இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் இத்தகுதி இல்லாமலும் கலந்துகொள்ளலாம். அதேநேரம் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறும் பட்சத்தில் தகுதிகாண் பருவத்துக்குள் கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அப்போதுதான் பணிவரன்முறை செய்யப்படும். டிஎன்பிஎஸ்சி நடத்தும் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) தேர்வு மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கே அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தேர்வுமுறையின்படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் அல்லது ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்றவர்கள் கணினி சான்றிதழ் தேர்வை எழுதலாம். முதல் தாள் தியரி மற்றும் 2-வது தாள் செய்முறைத்தேர்வுக்கு தலா 100 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கணினி சான்றிதழ் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, தமிழ், மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வுகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. தேர்வில் மொத்த தாள்களின் எண்ணிக்கை 2-லிருந்து 4 ஆக உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வில் புதிய முறையை நடைமுறைப்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தேர்வில் மொத்தம் 4 தாள்கள் இடம்பெறும். முதல் தாள் கணினி தொடர்பான கருத்தியல் (தியரி) தாள். இதற்கு 50 மதிப்பெண், தேர்வு நேரம் 60 நிமிடங்கள். 2-வது தாள் ஆங்கில தட்டச்சு தாள் (ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்). இதற்கு 50 மதிப்பெண். தேர்வு நேரம் 10 நிமிடங்கள்.
3-வது தாள் தமிழ் தட்டச்சு தாள் (ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்). 50 மதிப்பெண். தேர்வு நேரம் 10 நிமிடங்கள். 4-வது தாள் கணினி மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் தொடர்பான செய்முறைத்தேர்வு. இதற்கு 50 மதிப்பெண். தேர்வு நேரம் 60 நிமிடங்கள். தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமானால் ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அதோடு ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...