பள்ளி மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டு, கட்டாய பணி நீக்கம் செய்யப்படுவர் என, தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனியார் பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவ - மாணவியரிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது, போக்சோ சட்டத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளோம்.
மாணவ - மாணவியருக்கு காலை வழிபாட்டு கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும். மாணவர்கள் சுதந்திரமாக புகார் அளிக்கும் வகையில், புகார் பெட்டி வைக்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும், மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்க வேண்டும். அதன் வாயிலாக புகார் அளிக்க, 14417 மற்றும் 10980 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், இக்கட்டான சூழல்களில் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை ஒளிபரப்ப வேண்டும். என்.சி.சி., ஜே.ஆர்.சி., மற்றும் சாரண - சாரணியர் இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
மாணவ - மாணவியரிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்வது, அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடும்.
இதுபோன்ற மாணவியரின் பாதுகாப்பு குறித்த அரசாணைகள், செயல்முறைகளை நடைமுறைப்படுத்த, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...