காலம் மாற மாற கல்வி முறையிலும், கல்வி கற்கும் முறையிலும் மாற்றம் நிகழ்கிறது. எத்தகைய மாற்றம் நிகழ்ந்தாலும் அடிப்படை என்றும் மாறாது. எந்த ஒரு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்றாலும், அந்த துறையில் அடிப்படைகளை நன்கு அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சமீபகாலங்களாக, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எத்தகைய நவீன தொழில்நுட்பமும், ஒரு மருத்துவர் அடிப்படையை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை மாற்ற முடியாது. இது அனைத்து துறையினருக்கும் பொருந்தும். இன்றைய மாணவர்கள் இதனை நன்கு உணர்ந்து கொண்டு, அடிப்படை அம்சங்களை கற்றுக்கொள்வதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.
கட்டாய தேர்ச்சி
பெரும்பாலும், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் தேர்வு குறித்த புரிதலை பெறாதவர்களாக இருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிப்பது, அவர்களது உயர்கல்வியின்போது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மேலும், கல்வியின் மீதான ஆர்வத்தை குறைத்துவிடுகிறது என்பது எனது கருத்து. ஏனெனில், அனைவருக்கும் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி அளித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிபார்ப்பதும், நீட், ஜே.இ.இ., போன்ற கடும் போட்டி நிறைந்த தேசிய அளவிலான தேர்வுகளில் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும்.
ஆறாம் வகுப்பில் இருந்து மாணவர்கள் தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் தான், அவர்களால் உயர் வகுப்புகளில் திறம்பட செயல்பட முடியும். அதேபோல், பள்ளி தேர்வுகளில் 35 சதவீத மதிப்பெண் தேர்ச்சிக்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் மீதமுள்ள 65 சதவீத மதிப்பெண் தோல்வியாகவே கருதப்பட வேண்டும். அத்தகைய தோல்வி ஏற்றுக்கொள்ளப்பட கூடிய ஒன்றாக இருத்தல் கூடாது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ இடங்கள் உறுதியாக கிடைப்பதில்லை; அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய மாணவர்களுக்கு சொல்ல விரும்புவதுயாதெனில், பள்ளி காலங்களை வீணடிக்காமல், முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்; எந்த பாடப்பிரிவிலும் அடிப்படைகளை ஆழமாக அறிந்து கொள்ளுங்கள் என்பதுவே...
-ரமேஷ் லம்பா, பொதுச் செயலர், ஆதர்ஷ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், சென்னை.
Very correct
ReplyDelete