சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டணம் எதிர்த்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
தமிழ்நாடு சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் சங்கத்தின் செயலர் ஜெகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை, மூன்று ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, 2022ல் உத்தரவிட்டது.
தனியார் பல்கலை கல்லுாரிகளுக்கு ஒரு விதமான கட்டணமும், சுயநிதி கல்லுாரிகளுக்கு ஒரு விதமான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. சுயநிதி கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், தனியார் பல்கலை மருத்துவ கல்லுாரிகளுக்கு இணையாக உள்ளன. ஆனால், பல்கலை மருத்துவ கல்லுாரிகளுக்கு மட்டும் எப்படி அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பள செலவு, கல்லுாரிகளை நடத்துவதற்கு ஆகும் செலவு அதிகரித்து வருகிறது. இணைப்பு கட்டணம், ஆய்வுக் கட்டணம் என, சுயநிதி கல்லுாரிகள் செலுத்த வேண்டியதுள்ளது. தனியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இத்தகைய செலவுகள் இல்லை.
கட்டணத்தை அதிகரிக்கக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சரிடம் மனு அளித்தோம். கடந்த ஆகஸ்ட்டில், கட்டண நிர்ணய குழுவிடம், மனு அளித்தோம்; எந்த பதிலும் இல்லை. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை உறுதி செய்து, கடந்த செப்டம்பரில், கட்டண நிர்ணய குழு உத்தரவிட்டுள்ளது.
எனவே, கட்டண நிர்ணய குழு நிர்ணயித்ததை ரத்து செய்ய வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து, புதிதாக கட்டணத்தை நிர்ணயிக்க, குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, சுகாதாரத்துறை செயலர், கட்டண நிர்ணய குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...