ஆசிரியர் கொலையில் தொடர்புடைய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பிரபு செஸ்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜலேந்திரன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் தெற்கு செயலாளர் கனகராஜா, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட மகளிர் செயலாளர் காஞ்சனாதேவி, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநில துணை தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ஜோசப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற ஆசிரியர்கள், பள்ளியில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வேண்டும். அதற்கான சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும். கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில், கடும் நடவடிக்கை வேண்டும், ஆகியவற்றை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அச்சமாக உள்ளது...
காஞ்சனா தேவி, ஆசிரியை:
பள்ளி நேரத்தில் ஒருவர் தைரியமாக பள்ளிக்குள் நுழைந்து எவ்வித பயமும் இல்லாமல், ஆசிரியரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், பணியில் இருந்த டாக்டர் கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பித்தார். ஆசிரியர் விஷயத்தில் பரிதாபமாக இறந்துள்ளார். அரசு பள்ளிகளில் உள்ளே யார் வருகிறார் என்பது கூட தெரியாமல் உள்ளது. ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
போர்க்கால நடவடிக்கை
விஜயராணி, ஆசிரியை:
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. பள்ளிக்குள் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பது கூட தெரியாத நிலை உள்ளது. ஆசிரியை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கூறியது போல், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...